GEM VEERAMANI CASE : வெளியே வராத புகார்கள் உள்ளதா? இந்த எண்ணில் தொடர்பு கொள்ளலாம் !

Home TamilNadu GEM VEERAMANI CASE : வெளியே வராத புகார்கள் உள்ளதா? இந்த எண்ணில் தொடர்பு கொள்ளலாம் !
GEM VEERAMANI CASE : வெளியே வராத புகார்கள் உள்ளதா? இந்த எண்ணில் தொடர்பு கொள்ளலாம் !
Spread the love

சென்னையைச் சேர்ந்த ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் ஆர். வீரமணி மீது சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், தற்போது மேலும் ஒரு போக்ஸோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, கடந்த காலங்களில் நடந்ததாக கூறப்படும் சம்பவங்கள் குறித்து பாதிக்கப்பட்டவர்கள் அல்லது தகவல் தெரிந்தவர்கள் காவல்துறையை அணுகும் வகையில் பிரத்யேக தொடர்பு எண்ணையும் சிறப்பு புலனாய்வு போலீஸ் குழு வெளியிட்டுள்ளனர்.

20 ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம் தொடர்பாக புதிய புகார் :

வீரமணி மீது ஏற்கனவே பல்வேறு பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கடந்த 2004-ம் ஆண்டு நடைபெற்றதாக கூறப்படும் ஒரு சம்பவம் தொடர்பாக புதிய புகார் ஒன்று காவல்துறையில் அளிக்கப்பட்டுள்ளது.

புகாரில், ஐஸ்ஹவுஸ் பகுதியில் வசித்து வந்த தனது மகளுக்கு கல்வி உதவி செய்வதாக கூறி வீரமணி அறிமுகமானதாகவும், பின்னர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதாகவும் அந்த பெண்ணின் தந்தை குற்றம்சாட்டியுள்ளார்.

மன உளைச்சலில் மகள் உயிரிழப்பு என தந்தை புகார் :

வீரமணியின் நடவடிக்கைகளால் தனது மகள் கடும் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும், அதன் காரணமாக அவர் தூக்கிட்டு உயிரிழந்ததாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக அப்போது ஐஸ்ஹவுஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும், ஆனால் அது சந்தேக மரணம் என்ற அடிப்படையில் மட்டுமே பதிவு செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், பின்னர் காவல் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சம்பந்தப்பட்ட வழக்கு ஆவணங்கள் அழிந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டதாகவும் புகார்தாரர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய போக்ஸோ வழக்கை தொடர்ந்து தீவிரமாகும் விசாரணை :

தற்போது வீரமணி கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில், கடந்த காலத்தில் தனக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து மீண்டும் காவல்துறையை அணுகியதாக புகார்தாரர் தெரிவித்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில், சிறார் பாதுகாப்பு சட்டமான போக்ஸோ சட்டத்தின் கீழ் புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக சிறப்பு புலனாய்வு போலீஸ் குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து வெளியாகும் புகார்கள்: விசாரணையில் காவல்துறை :

வீரமணி மீது பல சிறுமிகள் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளதாக கூறப்படும் நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு போலீஸ் குழு தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

பாதிக்கப்பட்டவர்கள் அளிக்கும் வாக்குமூலங்கள், கிடைக்கும் ஆதாரங்கள் மற்றும் ஏற்கனவே பெறப்பட்ட புகார்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில் பெண் அதிகாரிகள் இடம்பெறும் சிறப்பு புலனாய்வு குழு (SIT) அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு விசாரணை தீவிரமடைந்துள்ளது.

வீரமணியால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்க பிரத்யேக எண் :

புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை வெளியில் வராத புகார்கள் அல்லது கடந்த காலங்களில் பாதிக்கப்பட்டும் உரிய நடவடிக்கை கிடைக்காமல் இருந்தவர்கள் சிறப்பு புலனாய்வு போலீஸ் குழுவை அணுகலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதற்காக சிறப்பு புலனாய்வு போலீஸ் குழு சார்பில் பிரத்யேக தொடர்பு எண் வெளியிடப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் அல்லது சம்பவம் குறித்து தகவல் தெரிந்தவர்கள் “9345319676” என்ற எண்ணில் வாட்ஸ்அப் மூலமாகவோ அல்லது நேரடியாக அழைத்தோ தகவல் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கலாம் என போலீசார் கணிப்பு :

வீரமணி மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை விரிவுபடுத்தப்பட்டுள்ள நிலையில், மேலும் சிலர் புகார் அளிக்க வாய்ப்புள்ளதாக சிறப்பு புலனாய்வு போலீஸ் குழு  கருதுகிறது.

இதனால், பாதிக்கப்பட்டவர்கள் தயக்கமின்றி முன்வந்து தகவல் அளிக்க வேண்டும் என்றும், அவர்களின் புகார்கள் உரிய முறையில் விசாரிக்கப்படும் என்றும் சிறப்பு புலனாய்வு போலீஸ் குழு தெரிவித்துள்ளனர்.


Spread the love

Leave a Reply

Your email address will not be published.

× Free India Logo
Welcome! Free India