5 அமைச்சர்கள்… ஒரே ‘கரண்ட் கட்’! – “ஒரு மாதமா இதுதான் நிலைமையா?” – அன்புமணி காட்டம்!

Home TamilNadu 5 அமைச்சர்கள்… ஒரே ‘கரண்ட் கட்’! – “ஒரு மாதமா இதுதான் நிலைமையா?” – அன்புமணி காட்டம்!
5 அமைச்சர்கள்… ஒரே ‘கரண்ட் கட்’! – “ஒரு மாதமா இதுதான் நிலைமையா?” – அன்புமணி காட்டம்!
Spread the love

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் இன்று காலை தேர்தல் பரப்புரைக் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. செங்கோட்டையன், அருண்ராஜ் உள்ளிட்ட 5 அமைச்சர்கள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தின்போது மின்தடை ஏற்பட்டதாக அன்புமணி தெரிவித்துள்ளார்.

“அமைச்சர்கள் கூட்டத்துக்கே கரண்ட் கட் என்றால்… சாமானிய மக்களின் நிலை என்ன?” என்ற கேள்வியை எழுப்பும் வகையில் அவரது அறிக்கை அமைந்துள்ளது.

சென்னை தொடங்கி தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அறிவிக்கப்படாத மின்வெட்டு மற்றும் அடிக்கடி ஏற்படும் மின்தடைகள் அதிகரித்துள்ளதாக அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார். இதனால் வீடுகள் மட்டுமின்றி தொழில் நிறுவனங்கள், விவசாயிகள் என பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, மின் அழுத்தம் சீராக இல்லாதது உள்ளிட்ட காரணங்களால் கோவை பகுதியில் மட்டும் ரூ.30 கோடி மதிப்பிலான இயந்திரங்கள் சேதமடைந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளதாகவும், தமிழ்நாடு முழுவதும் ரூ.100 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான கருவிகள் சேதமடைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

“2,000 மெகாவாட் மின்சாரம் வாங்குகிறோம்… மின்வெட்டு சரியாகிவிட்டது” என்று அரசு தரப்பில் கூறப்பட்டாலும், கள நிலவரத்தில் மாற்றம் இல்லை என்பதே அன்புமணியின் குற்றச்சாட்டு.

கிராமப்புறங்களில் ஒரு நாளைக்கு 6 முதல் 8 மணி நேரம் வரை மின்சாரம் நிறுத்தப்படுவதாக புகார்கள் இருப்பதாகவும், காவிரி பாசன மாவட்டங்களில் சம்பா சாகுபடியும் இதனால் பாதிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், தேசிய மின்சார சந்தையிலும் தனியார் மின்னுற்பத்தி நிலையங்களிடமிருந்தும் மின்சாரம் பெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கும் நிலையில், அதற்கான நடவடிக்கைகள் முழுமையாக மேற்கொள்ளப்படவில்லை என்றும் அன்புமணி விமர்சித்துள்ளார்.

இதற்கிடையே, மின்வாரியத்தில் முதலமைச்சர் விஜய் நேரடியாக ஆய்வு மேற்கொண்ட பின்னரும் மின்வெட்டு தொடர்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

“இனி அலட்சியம் வேண்டாம்… போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுங்கள்!” என்று தமிழ்நாடு அரசையும் மின்சார வாரியத்தையும் வலியுறுத்தியுள்ளார் அன்புமணி ராமதாஸ்.

அமைச்சர்கள் பங்கேற்ற கூட்டத்திலேயே மின்தடை ஏற்பட்டதாக முன்வைக்கப்பட்டுள்ள இந்தக் குற்றச்சாட்டு, தேர்தல் நேரத்தில் மின்வெட்டு விவகாரத்தை மீண்டும் பேசுபொருளாக்கியுள்ளது.


Spread the love

Leave a Reply

Your email address will not be published.

× Free India Logo
Welcome! Free India