
சிறுமிகள் தொடர்பான பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தொழிலதிபர் ஜெம் வீரமணி தொடர்பான விசாரணையில், புதிய ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக காவல்துறை தரப்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, தேனாம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து கைப்பற்றப்பட்டதாக கூறப்படும் சில காட்சிகள் மற்றும் ஆவணங்கள் குறித்து போலீஸார் ஆய்வு மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் ஏற்கெனவே ஜெம் குழுமத் தலைவர் வீரமணி, அவருக்கு உதவியதாக கூறப்படும் சாந்தி மற்றும் அவரது கணவர் மகேந்திர சிம்கன் ஆகியோர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது வீரமணியின் முன்னாள் உதவியாளர் கணேசனும் கைது செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை நான்காக அதிகரித்துள்ளது.
செல்போனில் இருந்ததாக கூறப்படும் வீடியோ
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் உதவியாளர் கணேசனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட செல்போனில் வழக்குடன் தொடர்புடையதாக கூறப்படும் வீடியோ இருந்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வீடியோ குறித்து தகவல் தெரிந்தும் காவல்துறையிடம் தெரிவிக்கவில்லை என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் கணேசன் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது அவரிடம் இருந்து கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பென்டிரைவ் மூலம் தொடங்கிய விசாரணை
இந்த வழக்கின் விசாரணை கடந்த ஆண்டு கிடைத்த ரகசிய புகாரின் அடிப்படையில் தொடங்கியதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த தன்னார்வலர் ஒருவர் மத்திய குற்றப்பிரிவின் பாலியல் குற்றத் தடுப்பு பிரிவில் புகார் அளித்ததாகவும், அவரிடம் கிடைத்த பென்டிரைவில் சிறுமிகள் தொடர்பான குற்றக் காட்சிகள் இருந்ததாக கூறப்பட்டதாகவும் போலீஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
இதையடுத்து போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டது.
போலீஸ் காவலில் விசாரணை
கைது செய்யப்பட்ட வீரமணியிடம் விசாரணை நடத்துவதற்காக போலீஸார் நடவடிக்கை மேற்கொண்டனர். வயது மற்றும் உடல்நிலை காரணமாக அவரை வெளியே அழைத்து வருவதில் சிக்கல் ஏற்பட்டதாகவும், அதனைத் தொடர்ந்து நீதிமன்ற அனுமதியுடன் சிறையிலேயே விசாரணை நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த விசாரணையில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் அடுத்தடுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேனாம்பேட்டை இல்லத்தில் கிடைத்ததாக கூறப்படும் ஆதாரம்
விசாரணையின் ஒரு பகுதியாக வீரமணியின் வீடு மற்றும் அலுவலகங்களில் காவல்துறையினர் சோதனை நடத்தியது. இதில் தேனாம்பேட்டை இல்லத்தில் இருந்து சில முக்கிய ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டதாகவும், அவற்றில் சில காட்சிகள் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீரமணிக்கு எதிரான வழக்கில் ஆதாரங்களை உறுதி செய்யும் நடவடிக்கையாக, கைப்பற்றப்பட்ட பொருட்கள் மற்றும் டிஜிட்டல் ஆதாரங்கள் தொழில்நுட்ப ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஜெம் வீரமணி வழக்கில் அடுத்தடுத்து திடுக்கிடும் ஆதாரங்கள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில்,தேனாம்பேட்டை பங்களாவில் நிர்வாண கோலத்தில் அவர் உல்லாசமாக இருந்த காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.



Leave a Reply