சென்னையில் நவீன வசதிகளுடன் கூடிய சட்டப்பேரவை மற்றும் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார். இதற்காகச் சுமார் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில், ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, செப்டம்பர் 8-ஆம் தேதி பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டது.
பட்டினப்பாக்கத்தில் எழுந்த எதிர்ப்புகள் என்ன?
பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ள இடத்தைச் சுற்றியுள்ள முள்ளிக்குப்பம், முள்ளிமாநகர் உள்ளிட்ட ஒன்பது கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள், அந்தப் பகுதியைப் படகுகளை நிறுத்தவும் மீன்பிடி வலைகளை உலர்த்தவும் பயன்படுத்தி வருகின்றனர்.
அங்கு தலைமைச் செயலகம் அமைக்கப்பட்டால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என மீனவர்கள் கவலை தெரிவித்தனர். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அவர்கள் தொடர் போராட்டங்களிலும் ஈடுபட்டு வந்தனர்.
மேலும், பட்டினப்பாக்கம் பகுதியில் குறுகிய சாலைகள், பள்ளிகள் உள்ளிட்டவை இருப்பதால், தலைமைச் செயலகம் அமைக்கப்பட்டால் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கும் என்றும் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் தரப்பில் எதிர்ப்புகள் எழுந்தன.
கடந்த 2004-ஆம் ஆண்டு சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பட்டினப்பாக்கமும் ஒன்று என்பதால், அங்கு புதிய கட்டடம் அமைப்பது தொடர்பாகச் சுற்றுச்சூழல் சார்ந்த கவலைகளும் முன்வைக்கப்பட்டன.
இதனால், பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைப்பதற்கான அரசாணையைத் திரும்பப் பெற்று, மாற்று இடத்தைத் தேர்வு செய்ய வேண்டும் எனப் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.
மாற்று இடமாகப் பல்லவன் இல்லம்?
இந்நிலையில், பட்டினப்பாக்கத்தில் எழுந்த கடும் எதிர்ப்புகளைத் தொடர்ந்து, சென்னையில் உள்ள பல்லவன் இல்லம் மற்றும் அரசு போக்குவரத்துக் கழக வளாகத்துக்குச் சொந்தமான 13.22 ஏக்கர் நிலத்தைப் புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கான மாற்று இடமாகத் தமிழ்நாடு அரசு தீவிரமாகப் பரிசீலித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த இடம் அரசுக்குச் சொந்தமானது என்பதால், புதிதாக நிலங்களைக் கையகப்படுத்த வேண்டிய அவசியம் குறையும் என்றும், பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவது தொடர்பான சிக்கல்களைத் தவிர்க்க முடியும் என்றும் கூறப்படுகிறது.
மேலும், பல்லவன் இல்லம் அமைந்துள்ள பகுதி பேருந்து, புறநகர் மின்சார ரயில் மற்றும் மெட்ரோ ரயில் சேவைகளுக்கு அருகில் இருப்பதால், அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் எளிதாக வந்து செல்ல முடியும் எனக் கருதப்படுகிறது. ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்துக்கு அருகில் இருப்பதும் இந்த இடத்தின் சாதகமான அம்சமாகக் குறிப்பிடப்படுகிறது.
கோயம்பேட்டுக்கு மாறுகிறதா போக்குவரத்துக் கழகத் தலைமையகம்?
பல்லவன் இல்லம் மற்றும் மாநகரப் போக்குவரத்துக் கழகப் பணிமனை வளாகங்கள் புதிய தலைமைச் செயலகத்துக்காகப் பயன்படுத்தப்பட்டால், மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் தலைமையகத்தை கோயம்பேட்டுக்கு மாற்றுவது குறித்தும் பரிசீலிக்கப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், புதிய தலைமைச் செயலகத்துக்கான மாற்று இடம் குறித்த இறுதி முடிவோ, பல்லவன் இல்ல வளாகத்தில் கட்டடம் அமைப்பது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்போ இதுவரை வெளியாகவில்லை.
பட்டினப்பாக்கத்தில் எழுந்த எதிர்ப்புகளைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு மாற்று இடத்தைத் தேர்வு செய்ய உள்ளதா, புதிய தலைமைச் செயலகம் பல்லவன் இல்லத்தில் அமையுமா என்பது குறித்துத் தெளிவான அறிவிப்பு வெளியாகும் வரை காத்திருக்க வேண்டியுள்ளது.





Leave a Reply