விலைவாசி உயர்வு… தவெக அரசு பொறுப்பு? ஆய்வாளர்கள் திடுக்!

Home TamilNadu விலைவாசி உயர்வு… தவெக அரசு பொறுப்பு? ஆய்வாளர்கள் திடுக்!
விலைவாசி உயர்வு… தவெக அரசு பொறுப்பு? ஆய்வாளர்கள் திடுக்!
Spread the love

தமிழ்நாட்டில் தற்போதைய சூழலில் மக்களைக் கவரும் விதமான தவெக அரசின் தாறுமாறான வாக்குறுதிகள் ஒரு பக்கம். அதன் மறுபக்கம் விலைவாசி உயர்வு.

2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு, பல ஆண்டுகளாக ஆண்ட திராவிடக் கட்சிகளைத் தோற்கடித்து, நேற்று மழையில் முளைத்த காளான் போல தவெக அரசு ஆட்சியைப் பிடித்து அரியணையில் அமர்ந்துள்ளது என அரசியல் விமர்சகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த அரசின் வெற்றிக்கு விஜய்யின் முகம் என்று ஒருபக்கம் கூறப்பட்டாலும், அதன் மறுபக்கம் தவெக அரசின் பெண்களைக் கவரும் கவர்ச்சிக்கரமான வாக்குறுதிகள் தான் என்று  கூறப்படுகிறது.

அப்படி, தவெக அரசின் பெண்களைக் கவரும் திட்டங்கள்:

  • – வெற்றிப் பயணம் திட்டம்
  • – அன்னபூரணி சூப்பர் சிக்ஸ்
  • – மாதம் ரூ.2,500 உதவித்தொகை
  • – தாய்க்கேர் திட்டம்
  • – அண்ணன் சீர் திட்டம்
  • – வெற்றி மகளிர் ஆடு வளர்ப்புத் திட்டம்
  • – தாய்மாமன் தங்க மோதிரத் திட்டம்

இப்படிப் பெண்களின் வாக்கு வங்கிகளை மட்டுமே குறிவைத்து தவெக அரசு காய்களை நகர்த்தி வெற்றி வாகை சூடியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

சமீபத்தில் தாராபுரம், மதுராந்தகம் ஆகிய இரு தொகுதிகளில் அக்டோபர் 6ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த இடைத்தேர்தலைக் கருத்தில் கொண்டு எப்படியாவது இதில் வெற்றி பெற்று தனது பெரும்பான்மையை நிரூபிக்கும் கட்டாயத்தில் தவெக அரசு தள்ளப்பட்டிருந்தது.

இதனைக் கருத்தில் கொண்டு அக்டோபர் 2ஆம் தேதி வெற்றிப் பயணம் திட்டத்தைத் தொடங்கி வைத்தது. இந்தத் திட்டத்திற்கு முன்னதாக, கடந்த செப்டம்பர் 28ஆம் தேதி தாய்மாமன் தங்க மோதிரத் திட்டத்தைத் தொடங்கி வைத்தது.

இப்படித் தவெக அரசு மக்களைக் கவரும் திட்டங்களைத் தொடங்கியும், அதன் மூலம் இடைத்தேர்தலில் மாபெரும் வெற்றியையும் பெற்றது. இதற்கடுத்து ஜனவரி மாதம் பொங்கல் நாளை ஒட்டி அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது.

இதயெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும்.

தமிழ்நாடு ஏற்கெனவே கடன் சுமையில் மூழ்கியிருப்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஒட்டுமொத்தக் கடன் சுமையாக ரூ.10.98 லட்சம் கோடி இருப்பதாகக் கூறப்படுகிறது.

இவ்வளவு கடன் சுமைக்கு மத்தியிலும் தவெக அரசுஅடுத்தடுத்து திட்டங்களை கொண்டு வருவது விலை வாசி உயர்வுக்கு வித்திடுகிறதா என்ற கேள்விகள் எழுகின்றன.

மக்களின் அன்றாட வாழ்க்கையில் அடிப்படை உணவுகளாக இருக்கக்கூடிய அரிசி, பருப்பு, எண்ணெய், கோதுமை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை தாறுமாறாக எகிறியிருப்பதால் நடுத்தர மக்கள் மிகவும் பாதிப்பு அடைந்து வருகின்றனர். குறிப்பாக,  உற்பத்திக் குறைவு, தேவையற்ற ஏற்றுமதி போன்றவை இவ்விலைவாசி உயர்வுக்கு முக்கிய காரணியாக கூறப்படுகிறது.

விலைவாசி உயர்வும்…மக்கள் குழப்பமும்?

விலைவாசி உயர்வுக்குப் பல காரணங்கள் கூறப்பட்டாலும், உண்மை நிலை வேறு மாதிரியாக உள்ளது. இந்தியாவின் முதன்மையான தொழில் விவசாயம். நாட்டின் மக்கள் தொகை அதிகரித்து வரும் நிலையில், உணவுப் பொருட்களுக்கான தேவையும் பல மடங்கு அதிகரித்து வருகிறது. உணவுப் பொருட்களின் விலை உயர்வு மக்களிடையே கவலையை ஏற்படுத்தி வருகிறது.

உணவு தானியங்களின் உற்பத்தி குறைந்து வருவது, பெட்ரோலியப் பொருட்களின் விலையேற்றம், முன்பேர வர்த்தகம் மற்றும் தேவையற்ற ஏற்றுமதி போன்றவற்றால் தான் விலைவாசி தொடர்ந்து அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது.

உணவு தானியங்களின் உற்பத்தி, மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் பல மடங்கு குறைவாகவே உள்ளது. இந்தியாவில் ஒரு ஹெக்டேரில் நெல் உற்பத்தி 2.20 டன் என்ற அளவில்தான் உள்ளது. அதேசமயம், ஜப்பான் நாட்டில் ஒரு ஹெக்டேரில் 6.50 டன்னும், சீனாவில் 6.70 டன்னும், எகிப்தில் 7.50 டன்னும், இஸ்ரேலில் 5.50 டன்னும் நெல் உற்பத்தியாகிறது. இத்தனைக்கும் மேலே குறிப்பிட்டுள்ள நாடுகள் அனைத்தும் முழு அளவில் விவசாயத்தை மேற்கொள்ளும் நாடுகள் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

அதே சமயம், அங்கு மேற்கொள்ளப்படும் நவீனத் தொழில்நுட்பங்கள், விவசாயிகளுக்கு அந்நாட்டு அரசு தரும் ஆலோசனைகளால்தான் அந்நாடுகளால் அதிக உற்பத்தி செய்ய முடிகிறது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, 6.21 கோடி டன் அளவுக்கு உணவு தானியங்களுக்கான தேவைப்பாடு உள்ளது. ஆனால், இங்கு 5.69 கோடி டன்னுக்குத்தான் உற்பத்தி உள்ளது. தமிழ்நாட்டில் 51 லட்சம் ஹெக்டேர் நிலத்தில் 19 லட்சம் ஹெக்டேரில்தான் பயிர் செய்யப்படுகிறது.

கடந்த பத்து ஆண்டுகளில் மட்டும் லட்சக்கணக்கான மக்கள் தாங்கள் சார்ந்திருந்த விவசாயத் தொழிலை விட்டு வெளியேறியுள்ளனர் என்பது வருந்தத்தக்க செய்தியாகும்.

இந்தியாவில் 2.30 லட்சம் ஹெக்டேரில் 1.05 கோடி டன் அளவுக்குப் பருப்பு வகைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இது போதிய அளவுக்கு இல்லாததால், ஆண்டுதோறும் 30 லட்சம் டன் அளவுக்குப் பருப்பு இறக்குமதி செய்யப்படுகிறது. பருப்பு வகைகளைத் தொடர்ந்து இறக்குமதி செய்வதால், அதன் விலை நிலையில்லாமல் உள்ளது.

118 கோடி மக்கள் தொகை கொண்ட நம் நாட்டில், 2001ஆம் ஆண்டுக்குப் பிறகு வேளாண் உற்பத்தி 20 சதவீதம் குறைந்துள்ளது. பெட்ரோலியப் பொருட்களின் விலையும் உயர்ந்துகொண்டே போகிறது.

மத்திய அரசு, பெட்ரோலிய நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பை ஈடுகட்டுவதற்காக, அந்நிறுவனங்களே பெட்ரோலின் விலையை நிர்ணயம் செய்துகொள்ள அனுமதி வழங்கியது. இதனால் பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

இழப்பு என்று கூறிக்கொள்ளும் இந்நிறுவனங்கள் கடந்த நான்கு ஆண்டுகளில் மத்திய அரசுக்கு கலால், சுங்கம், பங்கு ஈவுத்தொகை மற்றும் சேவை வரிகள் மூலம் ரூ.4 லட்சத்து 10 ஆயிரத்து 842 கோடி வழங்கியுள்ளன.

இதே காலத்தில் மாநில அரசுகளுக்கு மதிப்புக் கூட்டு வரி (VAT) மற்றும் ‘சர்ஜார்ஜ்’ எனப்படும் கூடுதல் வரி முதலியவற்றின் மூலம் ரூ.2 லட்சத்து 63 ஆயிரத்து 766 கோடியை வழங்கியுள்ளன.

இந்நிறுவனங்களுக்கு மத்திய அரசு ரூ.23,325 கோடி மானியம் வழங்கியுள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் இந்நிறுவனங்களால் மத்திய அரசுக்கு ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்து 779 கோடியும், மாநில அரசுகளுக்கு ரூ.72 ஆயிரத்து 89 கோடியும் வருவாய் கிடைத்துள்ளது. இதே காலத்தில் ரூ.1 லட்சத்து 26 ஆயிரத்து 288 கோடியை இந்நிறுவனங்கள் தங்கள் ஆண்டறிக்கையில் வருவாயாகக் காட்டியுள்ளன.

நாம் ஒவ்வொருவரும் ஒரு லிட்டர் பெட்ரோல் வாங்கும்போது, மொத்தத் தொகையில் 50 சதவீதத் தொகையை வரியாகச் செலுத்துகிறோம். பெட்ரோலியப் பொருட்களின் விலையைக் கட்டுக்குள் வைத்தாலே உணவுப் பொருட்களின் விலை உயர்வைத் தடுத்து நிறுத்தலாம்.

முன்பேர வர்த்தகத்தில் நம் நாட்டில் 23 நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. இதில் தங்கம், வெள்ளி உள்ளிட்ட உலோகங்கள் மற்றும் உணவு தானியங்கள் மீது முன்பேர வர்த்தகம் மேற்கொள்ளப்படுகிறது.

இந்நிறுவனங்கள் பொருட்களைக் கையில் வைத்திருக்காமலேயே வியாபாரத்தில் ஈடுபடுகின்றன. இவை நிர்ணயிக்கும் விலையைத்தான் வியாபாரிகள் ஏற்க வேண்டும். இந்த முன்பேர வர்த்தகச் சந்தைகள் வாயிலாக மத்திய அரசுக்குச் சேவை வரி மூலம் பல்லாயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது.

சென்ற டிசம்பர் வரை இச்சந்தைகளில் ரூ.95 லட்சம் கோடி அளவுக்கு வர்த்தகம் நடந்துள்ளது. நடப்பாண்டு ஜனவரி மாதத்தில் இதில் தனியாவைச் சேர்த்ததன் விளைவாக, ரூ.40க்கு விற்ற தனியா தற்போது ரூ.50 ஆக அதிகரித்துள்ளது.

முன்பேர வர்த்தகத்தில் சர்க்கரை இருந்தபோது அதன் விலை கடுமையாக உயர்ந்தது. பிறகு நீக்கப்பட்டதைத் தொடர்ந்து அதன் விலை சரிவடைந்தது. இந்நிலையில், மீண்டும் சர்க்கரையை இதில் இணைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்ததாக, தேவையற்ற ஏற்றுமதிக்கு அரசு விதித்த தடையை குறைந்தது ஆறு மாத காலத்திற்காவது நீட்டிக்க வேண்டும். நம் நாட்டில் விளையும் உணவு தானியங்கள், இங்குள்ள மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்த பிறகுதான் ஏற்றுமதி செய்ய வேண்டும்.

சமீப காலமாக அரசு உணவு தானியங்களை அதிகளவில் ஏற்றுமதி செய்து வருகிறது. இதனால் உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை ஏற்படுகிறது. இதற்குச் சிறந்த உதாரணமாக வெங்காயத்தை எடுத்துக்கொள்ளலாம். உள்நாட்டில் உற்பத்தி குறைந்த நிலையில், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. இதனால் அதன் விலை கடுமையாக உயர்ந்தது. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியும் செய்யப்பட்டது.

இந்த நிலையில், தற்போது அதன் உற்பத்தி அதிகரித்ததால் அதன் விலை மிகவும் சரிவடைந்தது. இதையடுத்து, அதன் மீதான ஏற்றுமதித் தடை மீண்டும் விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளது.

எனவே, ஏற்றுமையைப் பொறுத்தவரை அரசு தெளிவான கொள்கையைக் கடைப்பிடிக்க வேண்டும். இதுபோன்ற காரணங்களால்தான் உணவுப் பொருட்களின் விலை உள்நாட்டில் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

விலைவாசி உயர்வு குறித்து பொருளாதார ஆய்வாளர்கள் கூறுவது என்ன?

தமிழ்நாட்டில் விலைவாசி உயர்வுக்கு மூன்று முக்கியக் காரணங்கள் உள்ளன என்று கூறுகிறார்கள். ஒன்று, தட்பவெப்ப நிலை; இரண்டு, உலகப் பொருளாதாரம்; மூன்று, அமெரிக்க டாலரின் மதிப்பில் ஏற்படும் மாற்றங்கள்.

இவை ஒருபுறம் இருந்தாலும், தமிழ்நாட்டில் புதிதாகத் தோன்றிய தவெக அரசின் பல புதிய வாக்குறுதிகளும் காரணம் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

உற்பத்திச் சரிவு என்று ஒருபுறம் கூறப்பட்டாலும், அமெரிக்க டாலரின் மதிப்பில் ஏற்படும் மாற்றங்கள் உள்ளிட்ட காரணங்களால் உலகளவில் பணவீக்கம் அதிகரித்துள்ளது. இதனால் விலைவாசியிலும் தாக்கம் ஏற்படலாம்.

இத்தகைய காரணங்கள் ஒருபுறம் இருக்க, தற்போது புதிதாகத் தோன்றிய தவெக அரசின் திட்டங்களான மக்களுக்கு மாதம் ரூ.2,500 வழங்கும் வாக்குறுதி, வெற்றிப் பயணத் திட்டம் உள்ளிட்டவை தமிழ்நாட்டின் கடன் சுமையை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று கருதப்படுகிறது. தற்போது மின்சாரத்தை ஒரு யூனிட்டுக்கு ரூ.35 என்ற விலையில் தமிழ்நாடு அரசு வாங்கியுள்ள நிலையில் இதுவும் கடன் சுமையை  மேலும் அதிகரிக்கக்கூடும்.

கடன் சுமை அதிகரித்தால் பொருட்களின் விலைவாசி உயர்வும் அதிகரிக்கும் என்று கூறப்படும் நிலையில், தற்போது தமிழ்நாட்டில் நிலவி வரும் மிகப்பெரிய விலைவாசி உயர்வுப் பிரச்சினைக்கு தவெக அரசின் புதிய திட்டங்களும் மக்களைக் கவரும் விதமான பல்வேறு அறிவிப்புகளும் காரணமா என்ற கேள்வி எழுகிறது.

ஒருவேளை ஆய்வாளர்கள் கூறுவதுபோல் விலைவாசி உயர்வுக்கு தவெக அரசின் புதிய திட்டங்கள் தான் காரணமா? அல்லது உற்பத்திக் குறைவு, பணவீக்கம் போன்ற காரணங்கள் தான் காரணமா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Spread the love

Leave a Reply

Your email address will not be published.

× Free India Logo
Welcome! Free India
FREE INDIA · Reader account

Login is optional. You can close this window and keep reading.