
தமிழ்நாட்டில் நூலகங்களுக்கான புத்தக கொள்முதலில் மிகப்பெரிய முறைகேடு நடைபெற்றுள்ளதாக அமைச்சர் ராஜ்மோகன் பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் உதவியுடன் போலி புத்தகங்கள் உருவாக்கப்பட்டு, இல்லாத எழுத்தாளர்கள் மற்றும் பதிப்பகங்களின் பெயர்களில் புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தற்போது தமிழக அரசியல் மற்றும் அறிவுத்தளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னிமாரா நூலகத்தில் 523 புத்தகங்கள்!
சென்னை எழும்பூரில் உள்ள புகழ்பெற்ற கன்னிமாரா நூலகத்தில் அகல்விளக்கு பதிப்பகத்தின் பெயரில் 523 புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். இந்த புத்தகங்கள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டபோது பல்வேறு சந்தேகங்கள் எழுந்ததாகவும், புத்தகங்கள் போலியாக இருக்கலாம் என கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், அகல்விளக்கு பதிப்பகம் எங்கு செயல்படுகிறது என்பது குறித்து பபாசி அமைப்புக்கே தெரியவில்லை என்றும், அந்த பதிப்பகத்தின் உரிமையாளர் யார் என்பதை கண்டறிந்து விசாரணை நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
விஜய் பெயரிலும் போலி புத்தகங்கள்?
இந்த விவகாரத்தில் விஜயின் பெயரையும் பயன்படுத்தி போலி எழுத்தாளர்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குற்றம்சாட்டியுள்ளார். விஜய் பாலு, விஜய் ஆதித்தன் போன்ற பெயர்களில் புத்தகங்கள் இடம்பெற்றுள்ளதாகவும், அவற்றில் 2025-ம் ஆண்டுக்கான சீல் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
நடிகர், நடிகைகளின் பெயர்களை சிறிய மாற்றங்களுடன் பயன்படுத்தி அவர்களை எழுத்தாளர்களாக சித்தரித்துள்ளதாகவும், நிவேதா அன்பழகன், நிவேதா பால்ராஜ், சச்சின் உள்ளிட்ட பெயர்களில் புத்தகங்கள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏ.ஐ. மூலம் உருவாக்கப்பட்ட புத்தகங்களா?
பல ஆண்டுகளாக ஏ.ஐ. தொழில்நுட்பத்தை பயன்படுத்தி போலி புத்தகங்கள் உருவாக்கப்பட்டு, அவற்றை நூலகங்களுக்கு கொள்முதல் செய்யும் வகையில் கூட்டு சதி நடைபெற்றுள்ளதாக அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.
கோவை பெரியார் அறிவுலகத்தில் மட்டும் சுமார் 3,000-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் போலியாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். பெரியாரின் பெயரை பயன்படுத்தி முறைகேடு நடைபெற்றிருப்பது அறிவுத்தளத்திற்கு விடப்பட்ட சவால் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
அனைத்து நூலகங்களிலும் அதிரடி ஆய்வு!
இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு முழுவதும் உள்ள நூலகங்களில் ஆய்வு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். நூலகங்களில் கொள்முதல் செய்யப்பட்ட புத்தகங்களின் உண்மைத்தன்மை, எழுத்தாளர்கள் மற்றும் பதிப்பகங்களின் விவரங்கள் சரிபார்க்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
மேலும், திருச்சி காமராஜர் நூலகத்திற்கான புத்தக கொள்முதல் நடவடிக்கைகள் ரத்து செய்யப்பட உள்ளதாகவும், மாநிலம் முழுவதும் நூலகங்களுக்கான கொள்முதல் நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை தொடக்கம்!
இந்த விவகாரத்தில் முதற்கட்டமாக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடைபெற்று வருவதாக அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். அகல்விளக்கு, பீனிக்ஸ் உள்ளிட்ட பதிப்பகங்களின் செயல்பாடுகள் குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளதாகவும், ஒரே முகவரியில் பல பதிப்பகங்கள் செயல்படுவதாக கூறப்படும் புகார்களும் ஆய்வு செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
அரசியலுக்கு அப்பாற்பட்டு இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், நூலகங்களில் உள்ள போலி புத்தகங்கள் முழுமையாக கண்டறியப்பட்டு உரிய விசாரணை நடத்தப்படும் என்றும் அமைச்சர் உறுதியளித்துள்ளார்.



Leave a Reply