பரந்தூர் நிலம் யாருக்கு? விவசாயிகளுக்கு மீண்டும் வழங்கப்படுமா? அமைச்சர் ராஜ்மோகன் பதில்

Home TamilNadu பரந்தூர் நிலம் யாருக்கு? விவசாயிகளுக்கு மீண்டும் வழங்கப்படுமா? அமைச்சர் ராஜ்மோகன் பதில்
பரந்தூர் நிலம் யாருக்கு? விவசாயிகளுக்கு மீண்டும் வழங்கப்படுமா? அமைச்சர் ராஜ்மோகன் பதில்
Spread the love

பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்படுவதாக சட்டப்பேரவையில் 110-வது விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் புதிய விமான நிலையத்திற்கான மாற்று இடம் தேர்வு செய்யப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

பரந்தூர் திட்டத்தை எதிர்த்து ஏகனாபுரம் உள்ளிட்ட 12 கிராம மக்கள் நீண்ட காலமாக போராடி வந்த நிலையில், விவசாயிகளின் நிலத்தை பாதுகாக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் கூறினார். நிபுணர்களின் ஆலோசனையுடன் மாற்று இடங்கள் ஆய்வு செய்யப்பட்டு, தொழில்நுட்ப சாத்தியக்கூறுகளின் அடிப்படையில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இதற்கிடையே, புதிய விமான நிலையம் அமையும் வரை மீனம்பாக்கம் விமான நிலையத்தை விரிவுபடுத்த அரசு திட்டமிட்டுள்ளது. டெர்மினல் 3 பணிகள் முடிந்ததும் ஆண்டுக்கு 3.5 கோடி பயணிகளை கையாள முடியும் என்றும், புதிதாக டெர்மினல் 5 அமைக்கப்பட்டால் இந்த திறன் 5.5 கோடியாக உயரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்புக்கு திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு, பரந்தூர் விமான நிலையம் மாநிலத்தின் பொருளாதார மற்றும் தொழில் வளர்ச்சிக்கு முக்கியமானது என்றும், அரசியல் காரணங்களுக்காகவே திட்டம் கைவிடப்பட்டுள்ளதாகவும் விமர்சித்துள்ளார்.
இந்த நிலையில், சுமார் 1,700 ஏக்கர் நிலங்களை மீண்டும் விவசாயிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வரும் நிலையில், தமிழ்நாடு அரசு என்ன முடிவு எடுத்துள்ளது என்பது குறித்து அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம் அளித்துள்ளார். 

இது தொடர்பாக பேசிய அமைச்சர் ராஜ்மோகன், நிலங்களை உடனடியாக விவசாயிகளிடம் திருப்பி வழங்குவது குறித்து சட்ட ரீதியாக ஆய்வு செய்ய வேண்டியிருப்பதாக தெரிவித்தார். கையகப்படுத்தப்பட்ட பகுதிகளில் மீண்டும் விவசாயம் மேற்கொள்ளும் வகையில் நிலம் இருக்கிறதா என்பதையும் அதிகாரிகள் மற்றும் நிபுணர்களுடன் ஆலோசிக்க வேண்டியுள்ளதாக கூறினார்.

பரந்தூர் பகுதி வெறும் நிலப்பரப்பு மட்டுமல்ல,  அங்குள்ள நீர்நிலைகள் மற்றும் கால்வாய்கள் விவசாயத்திற்கு முக்கிய பங்காற்றுவதாக அமைச்சர் குறிப்பிட்டார். குறிப்பாக பழமையான கம்பன் கால்வாய் உள்ளிட்ட நீர்வழித்தடங்கள் மூலம் சுற்றுவட்டார ஏரிகளுக்கு நீர் செல்வதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இதனால் இப்பகுதியின் சுற்றுச்சூழல் மற்றும் நீரியல் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டே அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிகிறது.

பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை எதிர்த்து அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். திட்டம் ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் விஜய் அறிவித்த பிறகு, போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் அவருக்கு நன்றி தெரிவித்தனர்.

அதே நேரத்தில், விமான நிலையத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களை என்ன செய்வது என்பது அரசுக்கு புதிய சவாலாக மாறியுள்ளது. இந்த நிலங்களில் தொழில் நிறுவனங்களை அமைக்கும் வாய்ப்பு குறித்து ஏற்கனவே சட்டப்பேரவையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு மாறாக, நிலங்களை மீண்டும் விவசாயிகளிடமே ஒப்படைக்க வேண்டும் என இடதுசாரிகள் உள்ளிட்ட சில கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்த நிலையில், கையகப்படுத்தப்பட்ட நிலங்களை மீண்டும் விவசாய பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து முதலில் ஆய்வு செய்யப்படும் என்றும், பின்னர் சட்ட வல்லுநர்களின் ஆலோசனையைப் பெற்று முடிவு எடுக்கப்படும் என்றும் அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். இறுதியில் விவசாயிகளின் நலனுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.


Spread the love

Leave a Reply

Your email address will not be published.

× Free India Logo
Welcome! Free India