
இந்திய இஸ்லாமியர்களின் தனிபெரும் தலைவர் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் (ரஹ்) அவர்களின் 131-வது பிறந்தநாள் விழா தமிழ்நாடு அரசு சார்பில் இன்று (05-06-2026) காலை 9 மணியளவில் காயிதே மில்லத் அடக்கதலம் அமைந்துள்ள சென்னை திருவல்லிக்கேணி காயிதே மில்லத் நெடுஞ்சாலையில் உள்ள வாலாஜா மஸ்ஜித் வளாகத்தில் நடைபெற்றது.
இந்த நிலையில், காயிதே மில்லத் நினைவிடத்திற்கு முதலமைச்சர் விஜய், திமுக தலைவர் ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை உட்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வந்து மரியாதை செலுத்தினர்.
அப்போது, திமுக தலைவரும் முன்னாள் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினின் வருகைக்காக காத்திருந்த திமுகவினர், காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை வந்தவுடன் அவர் மற்றும் அவரது ஆதரவாளர்களை “துரோகிகள்” என்று கோஷமிட்டனர். இதனால், திமுகவினர் மற்றும் காங்கிரஸார் இடையே வார்த்தை மோதல் ஏற்பட, சற்று நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த காங்கிரஸ் கட்சி 28 இடங்களில் போட்டியிட்டு 5 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. எனினும், தேர்தலில் 108 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தவெக ஆட்சி அமைக்கக் காங்கிரஸ் தனது ஆதரவை வழங்கியது. கூட்டணி கட்சியான திமுகவை அப்படியே கழட்டிவிட்டு, எந்தவித அறிவிப்பும் கொடுக்காமல் கூட்டணியில் இருந்து வெளியேறி தவெக உடன் கூட்டணி வைத்தது காங்கிரஸ்.
தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்துப் பிற கூட்டணிக் கட்சிகள் திமுக தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்திய பிறகே, தங்கள் நிலைப்பாடுகளை வெளிப்படுத்தினர். காங்கிரஸ் கட்சி எவ்வித முன் அறிவிப்பும் இன்றி தவெகவுக்கு ஆதரவளித்தது திமுகவினர் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. நாங்கள் தான் ஏற்கனவே சொன்னோமே காங்கிரஸை எக்காரணம் கொண்டும் நம்ப வேண்டாம் என்று திமுகவினர் தலைமையிடத்தில் கூறினர்.
இதன் காரணமாகவே, செல்வப்பெருந்தகைக்கு எதிராக திமுகவினர் தற்போது தொடர் விமர்சனங்களையும் கண்டன முழக்கங்களையும் முன்வைத்து வருகின்றனர்.



Leave a Reply