திமுகவிற்கு எதிரான ஆவணங்களை கசியவிட்டாரா அருண் IPS? பின்னணி என்ன? 

Home TamilNadu திமுகவிற்கு எதிரான ஆவணங்களை கசியவிட்டாரா அருண் IPS? பின்னணி என்ன? 
திமுகவிற்கு எதிரான ஆவணங்களை கசியவிட்டாரா அருண் IPS? பின்னணி என்ன? 
Spread the love

தமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைந்த பிறகு முக்கிய நிர்வாக மாற்றங்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புத்துறை இயக்குநராக இருந்த ஏடிஜிபி ஏ. அருண் ஐபிஎஸ் திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தமிழக அரசின் உத்தரவின்படி, அருண் ஐபிஎஸ் போலீஸ் அகாடமி இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, லஞ்ச ஒழிப்புத்துறை ஐஜி மகேஸ்வரி, லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநரின் பொறுப்பை கூடுதலாக கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்த அருண், சட்டமன்றத் தேர்தல் காலத்தில் கட்டாயக் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட நிலையில், அதன்பின்னர் தவெக ஆட்சி அமைந்ததைத் தொடர்ந்து, லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புத்துறை இயக்குநராக நியமிக்கப்பட்டார். அவரது நியமனத்துக்கு எதிராக பல்வேறு தரப்பில் விமர்சனங்களும் எதிர்ப்புகளும் எழுந்தன. காரணம், சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்தபோது, அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி ஒருவரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் (குண்டாஸ்) கைது செய்ததாக அருண் ஐபிஎஸ் மீது வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கின் விசாரணையின்போது, ஊழல் தடுப்பு அமைப்பின் நம்பகத்தன்மை மற்றும் நேர்மையை பாதுகாப்பது மிகவும் அவசியம் என சென்னை உயர்நீதிமன்றம் வலியுறுத்தியது. மேலும், இதுபோன்ற சூழலில் அருணை லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புத்துறை இயக்குநராக நியமித்தது குறித்து உயர்நீதிமன்றம் கடுமையான கருத்துக்களை பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமல்லாமல், திமுகவிற்கு ஆதரவானவர் அருண் என்று கூறி அருணுக்கு எதிராக தவெகவினரே இருந்ததாகவும், கூட்டணிக் கட்சிகளின் நெருக்கடியால் தான் அருணை லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக தலைமை நியமித்ததாகவும் கூறப்படுகிறது. 

இத்தகையச் சூழலில், லஞ்ச ஒழிப்புத்துறையில் இருந்து அருண் இரண்டே மாதங்களில் தூக்கியெறியப்பட்டுள்ளது பெரும் பேசுபொருளாக மாறியுள்ள நிலையில், இதுகுறித்து உள்விவரம் அறிந்தவர்களிடம் விசாரித்தோம். 

அப்போது, தவெக அரசின் நிர்வாகம் தொடர்பான முக்கிய உள்விவகார தகவல்கள் கசிந்த விவகாரத்திலும்  அருண் ஐபிஎஸ் பெயர் தொடர்புபடுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, முன்னாள் அமைச்சர் எ.வ. வேலுவின் வீடுகளில் நடைபெற்ற சோதனை மற்றும் அவரிடம் விசாரணை நடத்தும் நடவடிக்கைகள் தொடர்பான தகவல்கள் முன்கூட்டியே வெளியானதாகவும், அதுமட்டுமல்லாமல் ஊழல் வழக்குகளில் சிக்கியுள்ள முன்னாள் அமைச்சர் கே.என். நேரு தொடர்பான முக்கிய ஆவணங்களும் லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பிலிருந்து கசிந்ததாகவும் சில குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதாக உள்விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர். 

இந்தப் பின்னணியில்தான், லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புத்துறை இயக்குநராக பொறுப்பேற்று இரண்டு மாதங்களுக்கும் குறைவான காலத்திலேயே அருண் ஐபிஎஸ், தமிழ்நாடு காவல் பயிற்சி அகாடமி இயக்குநராக மாற்றப்பட்டுள்ளதாக அரசியல் மற்றும் காவல்துறை வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. இருப்பினும், இந்த இடமாற்றத்திற்கான அதிகாரப்பூர்வ காரணத்தை தமிழக அரசு வெளியிடவில்லை.


Spread the love

Leave a Reply

Your email address will not be published.

× Free India Logo
Welcome! Free India