
தமிழறிஞரும், பிரபல பட்டிமன்ற நடுவருமான சாலமன் பாப்பையா உடல்நலக் குறைவு காரணமாக மதுரையில் இன்று (வெள்ளிக்கிழமை) காலமானார். அவருக்கு வயது 90. தமிழ் பேச்சுலகில் தனக்கென தனி இடத்தைப் பிடித்திருந்த அவரது மறைவு, தமிழ் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்ட உடல் :
மறைந்த சாலமன் பாப்பையாவின் உடல், மதுரை ஆரப்பாளையம் அருகே உள்ள ஞானஒளிபுரம் பகுதியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
அவரது மறைவையடுத்து அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், தமிழ் அறிஞர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் மேடைகளில் தனித்துவமான பேச்சாளர் :
மதுரை திருமங்கலம் அருகே உள்ள சாத்தங்குடியில் 1936ஆம் ஆண்டு பிறந்த சாலமன் பாப்பையா, மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்த்துறை பேராசிரியராக பணியாற்றினார்.
பின்னர் பட்டிமன்ற நடுவராகவும், தமிழ் பேச்சாளராகவும் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றார். நகைச்சுவை கலந்து ஆழமான கருத்துகளை எடுத்துரைக்கும் அவரது பேச்சு அனைத்து வயதினரையும் கவர்ந்தது.
உலகம் முழுவதும் ஒலித்த சாலமன் பாப்பையாவின் தமிழ் பேச்சு :
தொலைக்காட்சி பட்டிமன்றங்கள் மூலம் பிரபலமான சாலமன் பாப்பையா, இந்தியா மட்டுமின்றி அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளிலும் தமிழ் பட்டிமன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்.
“அன்பு பெரியோர்களே… அருமை தாய்மார்களே…” என்ற அவரது தொடக்க வார்த்தைகள், தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்காத நினைவாக இருந்து வருகிறது.
கடைசியாக பட்டிமன்றத்தில் பங்கேற்பு :
கடந்த 5ஆம் தேதி சிவகாசியில் நடைபெற்ற தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடைபெற்ற பட்டிமன்றத்தில் சாலமன் பாப்பையா பங்கேற்று பேசியிருந்தார்.
வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
தமிழ் பேச்சுலகின் முக்கிய அடையாளமாக விளங்கிய சாலமன் பாப்பையாவின் மறைவு, தமிழ் சமூகத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பாக பார்க்கப்படுகிறது.
நாளை மதுரையில் இறுதி சடங்கு :
சாலமன் பாப்பையாவின் உடல் நாளை (சனிக்கிழமை) பிற்பகல் மதுரை தத்தனேரி மின் மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதையொட்டி அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.



Leave a Reply