பெண்களுக்கு கர்ப்ப காலம் என்றாலே தொடர் மருத்துவப் பரிசோதனைகள்… ரத்தப் பரிசோதனை… ஸ்கேன் என மருத்துவமனைக்குச் செல்வது வழக்கமாகிவிடுகிறது. ஆனால், ஆண்களோ உடலில் ஏதாவது பெரிய பிரச்னை ஏற்பட்டால்தான் மருத்துவமனைப் பக்கம் செல்கிறார்கள். இந்த வித்தியாசமே தமிழ்நாட்டில் ஆண்கள், பெண்களைவிட சில ஆண்டுகள் முன்னதாக உயிரிழப்பதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக இருப்பதாக பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
2025-ம் ஆண்டு தமிழ்நாட்டில் பதிவான இறப்புகளில் ஆண்களின் எண்ணிக்கை 4,01,860. பெண்களின் இறப்பு எண்ணிக்கை 2,91,347. அதாவது, பெண்களைவிட 1,10,513 ஆண்கள் அதிகமாக உயிரிழந்துள்ளனர்.
இதில் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால்… இந்த கூடுதல் இறப்புகளில் 94,792 பேர், 15 முதல் 64 வயதுக்குட்பட்டவர்கள். அதாவது, வேலை செய்யும் வயது… குடும்பத்தைப் பார்த்துக்கொள்ளும் வயது… குழந்தைகளை வளர்க்கும் வயது… வயதான பெற்றோருக்குத் துணையாக இருக்க வேண்டிய வயது!
வயது ஏற ஏற… ஆண்களின் இறப்பு அதிகரிப்பு!
தமிழ்நாட்டின் 2025-ம் ஆண்டு தரவுகளைப் பார்த்தால், ஆண்கள் மற்றும் பெண்களின் இறப்பு எண்ணிக்கையில் உள்ள வித்தியாசம் வேலை செய்யும் வயதில் அதிகரிப்பது தெரிகிறது.
15-24 வயது:
ஆண்கள் – 9,167
பெண்கள் – 4,461
25-34 வயது:
ஆண்கள் – 17,135
பெண்கள் – 6,177
35-44 வயது:
ஆண்கள் – 31,585
பெண்கள் – 11,406
45-54 வயதில் பெண்களைவிட 28,474 ஆண்களும், 55-64 வயதில் 30,475 ஆண்களும் அதிகமாக உயிரிழந்துள்ளனர்.
இளம் வயதிலேயே மாரடைப்பு… பக்கவாதம்!
“இளம் வயதிலேயே மாரடைப்பு, பக்கவாதம், சிறுநீரக செயலிழப்பு போன்ற பிரச்னைகளுடன் வரும் ஆண்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது” என்கிறார்கள் பொது சுகாதாரத்துறையை சேர்ந்தவர்கள்.
பெண்களுக்கு கர்ப்ப காலத்திலும், குழந்தை பிறந்த பிறகும் தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பு இருப்பதால் சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகளை ஆரம்பத்திலேயே கண்டுபிடிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது.
ஆனால், ஆண்கள் பெரும்பாலும் 40 வயதைத் தாண்டிய பிறகும் வழக்கமான உடல்நலப் பரிசோதனைகளுக்கு மருத்துவமனைக்குச் செல்வதில்லை என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
சரியான நேரத்தில் பரிசோதனை செய்து, கண்டறியப்படும் நோய்களுக்கு தொடர்ந்து சிகிச்சை எடுத்துக்கொண்டால், முன்கூட்டிய இறப்புகளைத் தவிர்க்க முடியும் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
சாலை விபத்து… தற்கொலை… இரண்டும் சேர்ந்து தினமும் பல உயிர்கள்!
இளம் வயது ஆண்களின் இறப்பில் சாலை விபத்துகளும் தற்கொலைகளும் முக்கிய காரணங்களாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆண்கள் வேலைக்காக அதிகம் பயணம் செய்ய வேண்டியுள்ளது. சாதாரண தொழிலாளியாக இருந்தாலும் வேலைக்குச் செல்ல மோட்டார் சைக்கிள் தேவைப்படும் சூழல் உள்ளது என்கின்றனர்.
நடுத்தர வயதை எட்டும்போது கதை வேறு திசைக்குத் திரும்புகிறது. இதய நோய், பக்கவாதம், சர்க்கரை நோய், சிறுநீரக செயலிழப்பு, நாள்பட்ட சுவாச நோய்கள் மற்றும் புகையிலை, மதுபானம் தொடர்பான நோய்கள் ஆண்களின் உயிரிழப்புக்கு முக்கிய காரணிகளாக மாறுகின்றன.
“ஒருநாள் கூலி போய்விடுமே…” மருத்துவமனைக்குச் செல்லாத ஆண்கள்!
ஆண்கள் மருத்துவமனைக்குச் செல்லாமல் இருப்பதற்கு மருத்துவமனை மீதான பயத்தைவிட, ஒருநாள் வேலைக்குச் செல்ல முடியாமல் போனால் வருமானம் பாதிக்கப்படும் என்ற அச்சமே முக்கிய காரணம் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
ஸ்வீடனுடன் ஒப்பிட்டால்… அதிர வைக்கும் வித்தியாசம்!
தமிழ்நாட்டின் இறப்பு முறையை ஸ்வீடனுடன் மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் ஒப்பிட்டுப் பார்த்துள்ளனர். 2025-ல் ஸ்வீடனில் சுமார் 46,000 ஆண்களும், 46,200 பெண்களும் உயிரிழந்துள்ளனர். இரு பாலினத்தினருக்கும் இடையிலான எண்ணிக்கை கிட்டத்தட்ட சமமாக உள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் நிலைமை வேறாக உள்ளது.
தமிழ்நாட்டில் பதிவான இறப்புகளில் 42 சதவிகிதம் 65 வயதுக்கு முன்பே நிகழ்கின்றன என சுகாதாரத்துறை செயலாளர் டேரஸ் அகமது தெரிவித்துள்ளார். ஸ்வீடனில் இந்த விகிதம் சுமார் 10 சதவிகிதம் மட்டுமே என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதாவது, பிரச்னை ஆண்கள் இறப்பது மட்டுமல்ல… எந்த வயதில் இறக்கிறார்கள் என்பதிலும் இருக்கிறது!
இறப்புக்கான காரணமே தெரியவில்லை… ஏன்?
இன்னொரு முக்கியமான சிக்கலும் இருக்கிறது. 2025-ல் தமிழ்நாட்டில் மொத்தம் 6,93,207 இறப்புகள் பதிவாகியுள்ளன. ஆனால், இதில் வெறும் 41 சதவிகித இறப்புகளுக்கு மட்டுமே மருத்துவ ரீதியாக இறப்புச் சான்றிதழில் காரணம் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆண்களின் இறப்புகளில் இந்த மருத்துவச் சான்றளிப்பு விகிதம் 42 சதவிகிதமாகவும், பெண்களுக்கு 38 சதவிகிதமாகவும் உள்ளது.
மாநிலத்தில் நடைபெறும் இறப்புகளில் 10-ல் 6 இறப்புகள் மருத்துவமனைக்கு வெளியே நிகழ்வதாகவும், இதுபோன்ற இடங்களில் இறப்புக்கான காரணத்தை முறையாகப் பதிவு செய்வதில் சிக்கல் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஆக… ஆண்களின் ஆயுளைக் குறைப்பது நோய் மட்டுமல்ல. நோயை ஆரம்பத்திலேயே கண்டறியாமல் இருப்பதும், வேலை இழப்பு குறித்த அச்சமும், சாலை விபத்துகளும், வாழ்க்கைமுறை சார்ந்த பிரச்னைகளும் சேர்ந்து ஒரு பெரிய சுகாதாரச் சவாலாக மாறியிருக்கிறது. இந்தப் போக்கை மாற்ற, “உடம்பு சரியில்லை என்றால்தான் டாக்டர்” என்ற மனநிலையிலிருந்து “உடம்பு சரியாக இருக்கிறதா என்று தெரிந்துகொள்ளவும் டாக்டர்” என்ற நிலைக்கு ஆண்கள் மாற வேண்டியிருக்கிறது.





Leave a Reply