ஆகஸ்ட் 15ஆம் தேதி சாம்ராஜ்நகரில் உள்ள காவிரி வனவிலங்கு சரணாலயத்தில் கர்நாடக வனத்துறை அதிகாரிகளுக்கும் 3 தமிழர்களுக்கும் இடையே நடந்த மோதலில் அந்தோணி சாமி, ஜான் ரோஸ் பீட்டர், மற்றும் குமார் ஆகிய மூவரும் உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவத்தை தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய் “படுகொலை” என்று கூறிய நிலையில், வேட்டையாடுவதைத் தடுக்கும் நடவடிக்கையின்போது நடந்த துப்பாக்கிச் சண்டையில் 3 பேரும் கொல்லப்பட்டதாக கர்நாடக அரசு தெரிவித்த விளக்கத்தையும் அவர் நிராகரித்தும் இது குறித்தான கர்நாடக அரசு விளக்கம் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் தெரிவித்திருந்தார்.
சந்தேகிக்கப்படும் வேட்டையாடிகள் துப்பாக்கியால் சுட்டதைத் தொடர்ந்து, வனத்துறை அதிகாரிகள் தற்காப்புக்காக துப்பாக்கிச்சூடு நடத்தியதாக கர்நாடக அரசு திங்கள்கிழமை சட்டப்பேரவையில் தெரிவித்தது. இந்த 3 பேரின் மரணம் குறித்து பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டும் என்று கர்நாடக எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், வனத்துறை அதிகாரிகளின் நடவடிக்கையை மாநில அரசு நியாயப்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து விஜய் தெரிவித்த கண்டனத்துக்கு பதிலளித்த சிவகுமார், கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய இரு மாநிலங்களுக்கும் தனித்தனியான நிர்வாக மற்றும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் உள்ளதாகவும், நாட்டின் கூட்டாட்சி அமைப்புக்குள் அவற்றை அந்தந்த மாநிலங்களே சுயமாக கையாள வேண்டும் என்றும் கூறினார்.
“இது ஒரு கூட்டாட்சி அமைப்பு. எந்த மாநிலமும் மற்றொரு மாநிலத்தின் உள்விவகாரங்களில் தலையிடக் கூடாது. நான் ஒருபோதும் தமிழகத்தின் விவகாரங்களில் தலையிட்டதில்லை. அவர்களின் நிர்வாகம் குறித்து கருத்து தெரிவிக்கவும் நான் விரும்பவில்லை” என்று சிவகுமார் கூறினார்.
ஒவ்வொரு மாநிலமும் தனக்கென சொந்த சவால்களை எதிர்கொள்கிறது என்பதை தமிழக அரசியல் தலைவர்கள் புரிந்துகொண்டு, கர்நாடகாவின் சட்டம்-ஒழுங்கு நடவடிக்கைகள் குறித்து கருத்து தெரிவிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
“எங்கள் மாநிலத்தை எப்படிப் பாதுகாப்பது என்பது எங்களுக்குத் தெரியும். அவர்கள் அவர்களது வேலையைச் செய்யட்டும்; நாங்கள் எங்கள் வேலையைச் செய்வோம். நிர்வாகம் மற்றும் சட்டம்-ஒழுங்கு விவகாரங்களில் அவர்கள் தலையிடக் கூடாது” என்று அவர் மேலும் தெரிவித்தார்.
கர்நாடக அரசு மாநிலத்தின் நலன்களைப் பாதுகாப்பதற்கும், தனது பொறுப்புகளை நிறைவேற்றுவதற்கும் திறன் கொண்டது என்று சிவகுமார் கூறினார். மேலும், இந்த விவகாரத்தை நீண்டகால அரசியல் மோதலாக மாற்ற தான் விரும்பவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.




Leave a Reply