ஆக்ரமிப்பாளர்களின் பிடியில் அண்ணாமலையார் ! அகற்றச் சொல்லும் நீதிமன்றம் !

Home TamilNadu ஆக்ரமிப்பாளர்களின் பிடியில் அண்ணாமலையார் ! அகற்றச் சொல்லும் நீதிமன்றம் !
ஆக்ரமிப்பாளர்களின் பிடியில் அண்ணாமலையார் ! அகற்றச் சொல்லும் நீதிமன்றம் !
Spread the love

விசேஷ நாட்கள் என்றில்லை, சாதாரண நாட்களிலும்கூட திருவண்ணாமலை பக்தர்கள் கூட்டத்தால் திமிலோகப்படுகிறது. கடும் நெரிசலில் வெளியூர் பக்தர்கள் மட்டுமல்லாமல், உள்ளூர் பொது மக்களும் அல்லல்பட்டுவருகின்றனர். திருவண்ணாமலை அடிவாரத்தில் இருக்கும் ஆக்ரமிப்பு அராஜகமே இதற்கெல்லாம் காரணம் என்றும், இத்தகைய ஆக்ரமிப்புகளுக்கு அனைத்துக் கட்சிகளுமே ஆதரவாக நிற்கின்றன என்றும் வெடிக்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

இதுபற்றி நம்மிடம் பேசிய சமூக ஆர்வலர்கள், “திருப்பதி திருமலையில் ஒரு தனிநபர் ஆக்ரமிப்புகூட கிடையாது. இதனால் எத்தனை ஆயிரம் பக்தர்கள் அங்கு வந்தாலும் வாகனங்களை நிறுத்தவோ, பக்தர்கள் நடக்கவோ, சுழிப்பிட வசதிகளுக்கோ எந்த சிரமும் இருப்பதில்லை. ஆனால், திருவண்ணாமலையில் எல்லாமே தலைகீழ். ராஜகோபுரத்திற்கு முன்பே கடைகள் கட்ட நிதி ஒதுக்கி டெண்டர் விடுகிறார்கள். அதையும் நீதிமன்றம் தலையிட்டு நிறுத்தியது. இல்லையென்றால் ஒரு சிலரின் தனி லாபத்திற்கு மக்கள் காலாகாலத்திற்கும் அவதிப்பட்டிருப்பார்கள்.

மேலும், அண்ணாமலையார் கோயிலுக்குச் சொந்தமான பல இடங்கள் ஆக்ரமிப் பாளர்களின் கையில் இருக்கின்றன. உரிய பத்திரம் இருந்தால்தானே சொத்து விவரங்கள் தெரியவரும் என்று அதற்கான பத்திரங்களைக்கூட கோயிலில் இருந்து களவாடியிருக்கிறார்கள். இது புகாராக விஸ்வரூபம் எடுக்க சிலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இன்றைய நிலையில், அண்ணாமலையாரின் சொத்துகள் திருவண்ணாமலையில் எவ்வளவு இருக்கின்றன, வெளியூர்களில் எவ்வளவு இருக்கின்றன என்று அந்த அண்ணாமலையாருக்கு மட்டும்தான் வெளிச்சம். வேறு எந்த அதிகாரிகளுக்கும் தெரியாது. இதில் பல சொத்துகள் பல கைகள் மாறிபோய்விட்டன” என்றவர்கள் தொடர்ந்து பேசுகையில்..

“சில ஆண்டுகளுக்கு முன்பு திருவண்ணாமலை மலைச்சரிவில் ஏழு பேர் இறந்தார்கள். பல வீடுகள் சரிந்து தரைமட்டமாகின. 50 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் திருவண்ணாமலையின் அடிவாரத்தை அத்தனை பேரும் பார்த்திருக்கிறார்கள். ஆனால், நாளடைவில் அடிவாரத்தில் குடிசை போட ஆரம்பித்து 2,668 அடி மலையின் உயரத்தில் சுமார் 600 அடி உயரம் வரை மலையைக் குடைந்து, சமன்படுத்தி பலரும் வீடு கட்டிக் கொண்டார்கள்.
14 கி.மீட்டர் சுற்றளவுகொண்ட இந்த மலையில் கிழக்கு மற்றும் தெற்கு பக்கம் மட்டுமே ஆக்ரமிப்பு செய்திருக்கிறார்கள். காரணம், இது வருவாய்த்துறைக்கு சொந்தமான பகுதி. வடக்கு பக்கமோ, மேற்கு பக்கமோ அவர்களால் ஆக்ரமிப்பு செய்ய முடியவில்லை. அவை வனத் துறைக்கும், அத்தியந்தல், அடி அண்ணாமலை கிராமங்களுக்கும் சொந்தமானவை. ஆக்ரமிக்க வந்தவர்களை வனத்துறையும் தனியார் நிலத்திற்கு சொந்தக்காரர்களும் விரட்டியடித்ததைபோல் வருவாய்த்துறை விரட்டி. அடிக்கவில்லை. காரணம், அவர்களுக்கு கிடைத்த வருமானம் மின்வாரியமும் மின் இணைப்பு கொடுக்க மறுத்திருந்தால் இவ்வளவு வீடுகளை மக்கள் கட்டியிருக்கவே மாட்டார்கள்.

இந்த கொடுமைகளை பொறுக்க முடியாமல்தான் சமூக ஆர்வலர் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் உயர் நீதிமன்றத்தில் பொதுதல வழக்குத் தொடுத்து மலை ஆக்ரமிப்புகளை அகற்ற உத்தரவு பெற்றார். அதை அப்போதைய அமைச்சர் ஒருவர் அகற்றாமல் பார்த்துக்கொண்டார். இப்போது மீண்டும் தலையிட்ட கோர்ட் 1535 ஆக்ரமிப்பு விடுகளை அகற்ற பிறப்பித்த உத்தரவு நிலை என்ன? என்று கேட்க, அதன்பிறகே ஆக்ரமிப்பாளர்களுக்கு வட்டாட்சியர் நோட்டீஸ் வழங்கியுள்ளார். ஆனால், அவர்களுக்கு ஆதரவாக திமுக மற்றும் அதிமுகவைச் சேர்ந்த மாஜிக்கள் கட்சி பேதமின்றி களம் இறங்கியிருக்கிறார்கள்.

சமீபத்தில் திருவண்ணாமலை அண்ணா மலையார் மலையடிவார குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அப்போது பேசிய எ.வ.வேலு, ‘இது நம் ஊரின் பிரச்னை. இதில் அரசியல் கூடாது. திருவண்ணாமலைக்கு சம்பந்தப்படாத யானை ராஜேந்திரன் என்னும் வழக்கறிஞர் வழக்கு தொடுத்திருக்கிறார். நாம் சட்ட நுணுக்கம் தெரிந்த தனித்தனி வழக்கறிஞர்களை நியமிக்கவுள்ளோம்’ என்று பேசினார். சட்டமன்றத்திலும் இதையே வலியுறுத்தியுள்ளார்கள்.

எங்களின் எதிர்பார்ப்பு என்ன வென்றால், மலை ஆக்ரமிப்புகளை அகற்றி, பக்தர்களின் வாகனங்களை நிறுத்தவும், தரிசனத்திற்கு செல்லும் பக்தர்கள் வெயிலிலும், மழையிலும் தெருத்தெருவாய் கால்கடுக்க நிற்காமல் திருப்பதி திருமலைபோல் அமரவைக்கவும் அரங்கங்கள் சுட்டவும், கழிப்பிடங்கள் அமைக்கவும் பயன் படுத்திக்கொண்டால் லட்சோப லட்சம் பக்தர்கள் பயனடைவார்கள். சில ஆயிரம் மக்களுக்காக பல லட்சம் பக்தர்களை வதைக்கலாமா? நாங்கள் ஒன்றும் தனியாருக்கு சொந்தமான இடத்தில் இவற்றையெல்லாம் கட்டச் சொல்லவில்லை. அண்ணாமலையாருக்கும், அரசுக்கும் சொந்தமான சொத்துகளை மீட்டு அவற்றில் பொதுமக்களுக்குத்தானே கேட்கிறோம். அதே நேரத்தில் அங்கு குடியிருக்கும் மக்களுக்கு வேறு இடத்தில் மனைப்பட்டா கொடுத்து குடியேற்ற வேண்டும். எனவே, அரசு உடனடியாக இதில் தலையிட்டு பிரச்னைகளை சரிசெய்து, சிறந்த ஆன்மிக நகரமாக திருவண்ணாமலையை மாற்ற வேண்டும்” என்றார்கள்.

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் எ.வ.வே.சும்பனிடம் பேசினோம். “1970ல் அமைச்சராக இருந்த ப.உ.சண்முகம் இங்கு பலருக்கு பட்டா வழங்கியிருக்கிறார். சுமார் 70 ஆண்டுகளுக்கு மேல் இங்கு வீடு கட்டிக்கொள்ள அனுமதியும். மின் இணைப்பையும் கொடுத்து, அவர்களுக்கு ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை ஆதார் கார்டு போன்றவற்றை வழங்கிவிட்டு இப்போது இடத்தை காலி செய்யச்சொன்னால் எங்கே போவார்கள்? அவர்களின் வாழ்வாதாரம் என்னவாகும்? மேலும் இந்த மலை அதிகளவு மண் கொண்டுள்ளது. அதனால் சரிவு ஏற்படவும் வாய்ப்புள்ளது. பெரிய கட்டிடங்கள் கட்ட ஏற்புடையதல்ல. பக்தர்களுக்கு பழைய நகராட்சி அலுவலகம் ஜோதி பூ மார்க்கெட் ஆகிய இடங்களில் கார், டூ வீலர் பார்க்கிங் வசதி செய்து கொடுத்திருப்பதுடன், நெடுஞ் சாலைத்துறை மற்றும் எம்.பி. நிதியில் ஆர்.ஒ.குடிநீர் வசதி, கழிப்பிடங்கள் மற்றும் பயணிகள் தங்கும் விடுதி ஆகியவற்றை கட்டிக்கொடுத்திருக்கிறார்கள். பக்தர்கள் வந்து போய்விடுவார்கள். நிரந்தரமாக இருக்கும் ஏழை.எளிய மக்கள் எங்கே போவார்கள்?” எனக் கேட்டார். வேலு
அரசுதான் தொலைநோக்கு பார்வையுடன் நிரந்தரத் தீர்வு தர வேண்டும்.

– குமுதம் செய்திகளுக்காக அன்பு வேலாயுதம் .


Spread the love

Leave a Reply

Your email address will not be published.

× Free India Logo
Welcome! Free India
FREE INDIA · Reader account

Login is optional. You can close this window and keep reading.