அந்த நாள்… அந்த போட்டோ… அந்த காவலர்.. இப்போது வெளியான அதிர்ச்சி தகவல்..!

Home TamilNadu அந்த நாள்… அந்த போட்டோ… அந்த காவலர்.. இப்போது வெளியான அதிர்ச்சி தகவல்..!
அந்த நாள்… அந்த போட்டோ… அந்த காவலர்.. இப்போது வெளியான அதிர்ச்சி தகவல்..!
Spread the love

தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம்… தமிழ்நாட்டின் வரலாற்றில் அழிக்க முடியாத கறையாகப் பதிவான சம்பவம். 13 உயிர்களைப் பலிகொண்ட அந்த துப்பாக்கிச்சூடு தொடர்பான விசாரணை இன்னும் தொடர்ந்து வரும் நிலையில், அப்போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் மூலம் கவனம் பெற்ற காவலர் ராஜா தற்போது உயிரிழந்துள்ளார்.

2018-ம் ஆண்டு மே 22. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி பொதுமக்கள் நடத்திய போராட்டம் உச்சக்கட்டத்தை எட்டிய நாள். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கிச் சென்ற போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட பதற்றத்தைத் தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.

இந்த துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். தமிழ்நாட்டையே உலுக்கிய இந்தச் சம்பவம் தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் அப்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவின.

அவற்றில் ஒரு புகைப்படம் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. போலீஸ் வாகனத்தின் மேல் நின்றபடி, துப்பாக்கியை ஏந்தியிருந்த காவலர் ஒருவரின் புகைப்படம்தான் அது. மஞ்சள், கருப்பு நிற டி-ஷர்ட் அணிந்திருந்த அந்த நபர் யார் என்ற கேள்வி அப்போது பரவலாக எழுந்தது.

பின்னர் அவர் தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படையில் பணியாற்றிய காவலர் ராஜா என்பது தெரியவந்தது. துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய அருணா ஜெகதீசன் ஆணையத்தின் விசாரணையிலும் அந்தக் காட்சிகள் முக்கியத்துவம் பெற்றன.

இந்நிலையில், காவலர் ராஜாவுக்கு சமீபத்தில் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து தூத்துக்குடியில் உள்ள மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்றிரவு(செப்.,29) உயிரிழந்தார். ராஜாவுக்கு மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதற்கிடையே, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான சட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

13 உயிர்களைப் பறித்த அந்த துப்பாக்கிச்சூடு… பல ஆண்டுகளுக்குப் பிறகும் அதன் தாக்கம் குறையவில்லை. அந்தச் சம்பவத்தின் ஒரு முக்கியக் காட்சியில் இடம்பெற்ற காவலர் ராஜாவின் மரணம், மீண்டும் அந்த நாளை நினைவுக்குக் கொண்டு வந்திருக்கிறது.


Spread the love

Leave a Reply

Your email address will not be published.

× Free India Logo
Welcome! Free India