
கல்லூரி மாணவர்களின் தொழில்நுட்பத் திறனை மேம்படுத்தும் நோக்கில், ரூ.2,000 கோடி மதிப்பீட்டில் ‘வெற்றி’ மடிக்கணினித் திட்டத்தைச் செயல்படுத்த முதலமைச்சர் விஜய் ஒப்புதல் அளித்துள்ளார்.
இதற்கான விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் நிதி ஒதுக்கீட்டுக்கான நிர்வாக அனுமதியையும் தமிழ்நாடு அரசு வழங்கி அரசாணை வெளியிட்டுள்ளது.
இன்றைய டிஜிட்டல் உலகில் உயர்கல்வி மாணவர்களுக்கு மடிக்கணினி இன்றியமையாத கல்வி உபகரணமாக உள்ளது. தொழில்நுட்ப அறிவை வளர்த்துக்கொள்ளவும், திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் மேற்கொள்ளவும், இணையவழிக் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளுக்குத் தயாராகவும் மடிக்கணினிகள் உதவும் என்பதால் இத்திட்டம் செயல்படுத்தப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது.
யாருக்கெல்லாம் மடிக்கணினி கிடைக்கும்?
2026-2027-ம் கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் இத்திட்டத்தின் மூலம் பயன்பெற உள்ளனர். கலை மற்றும் அறிவியல், பொறியியல், பாலிடெக்னிக், ஐ.டி.ஐ., மருத்துவம், கால்நடை மருத்துவம், மீன்வளம், வேளாண்மை, சட்டம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு இளநிலைப் பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்படும்.
மேலும், 2025-2026-ம் கல்வியாண்டில் மடிக்கணினித் திட்டத்தின் மூலம் பயன்பெறாத அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் பயிலும் மூன்றாம் மற்றும் நான்காம் ஆண்டு தொழில்முறைப் படிப்பு மாணவர்களும் இத்திட்டத்தில் பயன்பெறலாம்.
பொறியியல் மாணவர்களுக்கு உயர்தர மடிக்கணினி!
பொறியியல் மாணவர்களின் தொழில்நுட்பக் கல்வித் தேவைகளைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கு இன்டல் கோர் ஐ5 அல்லது அதற்கு இணையான உயர்தரத் தொழில்நுட்ப வசதிகளைக் கொண்ட மடிக்கணினிகள் வழங்கப்பட உள்ளன.
இத்திட்டத்தைச் சீராகக் கண்காணித்து செயல்படுத்த முதலமைச்சர் விஜய் தலைமையில் உயர்மட்ட வழிகாட்டுதல் குழு அமைக்கப்படவுள்ளது. மேலும், தரமான மடிக்கணினிகளைக் கொள்முதல் செய்வதை உறுதிப்படுத்தும் வகையில், தமிழ்நாடு மின்னணு நிறுவனமான எல்காட் (ELCOT) நிறுவனத்துக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அரசின் இந்தத் திட்டம், அடித்தட்டு மற்றும் நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் உலகளாவிய தொழில்நுட்பப் போட்டிகளை எதிர்கொள்ளவும், வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்திக்கொள்ளவும் உதவும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.



Leave a Reply