CM விஜய் புதுக்கோட்டை பயணம் ! திட்டங்களின் அரசு பயணமா ? ரோடு ஷோ நடத்த அரசியல் பயணமா ?

Home TamilNadu CM விஜய் புதுக்கோட்டை பயணம் ! திட்டங்களின் அரசு பயணமா ? ரோடு ஷோ நடத்த அரசியல் பயணமா ?
CM விஜய் புதுக்கோட்டை பயணம் ! திட்டங்களின் அரசு பயணமா ? ரோடு ஷோ நடத்த அரசியல் பயணமா ?
Spread the love

முதலமைச்சர் விஜய் இன்று (நவம்பர் 2) புதுக்கோட்டை மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, சுமார் ரூ.100 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். மேலும், புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட முடிவுற்ற திட்டப் பணிகளைத் திறந்து வைத்து, புதிய திட்டங்களையும் தொடங்கி வைக்கிறார். முதலமைச்சரின் வருகையை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சுமார் 4,500 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதால் புதுக்கோட்டை பரபரப்பாகக் காணப்படுகிறது.

புதிய பேருந்து நிலையத்தைத் திறந்து வைக்கும் விஜய்!

சென்னையில் இருந்து இன்று காலை 9.15 மணிக்கு தனி விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் செல்லும் முதலமைச்சர் விஜய், அங்கிருந்து கார் மூலம் புதுக்கோட்டைக்குப் பயணம் மேற்கொள்கிறார். வழியில் பல்வேறு இடங்களில் அவருக்கு வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

புதுக்கோட்டை சென்றடையும் முதலமைச்சர், பிற்பகல் 12 மணி முதல் 12.20 மணிக்குள் ரூ.23.25 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய நவீன பேருந்து நிலையத்தைத் திறந்து வைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கிறார். இதற்கான இறுதிக்கட்டப் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

14 ஆயிரம் பயனாளிகளுக்கு ரூ.100 கோடி உதவிகள்!

புதிய பேருந்து நிலையத் திறப்பு விழாவைத் தொடர்ந்து, பிற்பகல் 12.30 மணியளவில் புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் நடைபெறும் அரசு விழாவில் முதலமைச்சர் பங்கேற்கிறார்.

இந்த விழாவில் சுமார் 14 ஆயிரம் பயனாளிகளுக்கு ரூ.100 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். மேலும், ரூ.8 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கம் உள்ளிட்ட முடிவுற்ற திட்டப் பணிகளையும் திறந்து வைக்கிறார். தொடர்ந்து, பல்வேறு புதிய திட்டங்களையும் தொடங்கி வைக்க உள்ளார்.

புதுக்கோட்டையில் ரோடு ஷோ நடத்த திட்டம்!

முதலமைச்சரின் வருகையை முன்னிட்டு திருச்சி – ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் பல்வேறு இடங்களில் வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக மாத்தூர் ரவுண்டானா, மண்டையூர், லட்சுமணப்பட்டி சுங்கச்சாவடி, கீரனூர் பிரிவு சாலை, நார்த்தாமலை உள்ளிட்ட பகுதிகளில் தவெக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளிக்கத் தயாராகி வருகின்றனர்.

மேலும், கட்டியாவயல் பகுதியில் இருந்து அரசு விருந்தினர் மாளிகை வரையிலான சுமார் 5 கிலோமீட்டர் தூரத்திற்கு சாலையின் இருபுறமும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வழித்தடத்தில் முதலமைச்சர் ரோடு ஷோ மேற்கொண்டு பொதுமக்களைச் சந்திக்கவும், அவர்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெறவும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

குறிப்பாக, விராலிமலை சட்டமன்றத் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள சூழலில், முதலமைச்சரின் இந்தப் பயணம் அரசியல் வட்டாரத்திலும் கூடுதல் கவனத்தைப் பெற்றுள்ளது.

4,500 போலீசார் பாதுகாப்பு; ட்ரோன் பறக்கத் தடை!

முதலமைச்சரின் வருகையை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட சுமார் 4,500 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

முதலமைச்சர் பயணிக்கும் வழித்தடம், புதிய பேருந்து நிலையம், ஆயுதப்படை மைதானம், அரசு விருந்தினர் மாளிகை உள்ளிட்ட முக்கிய இடங்கள் காவல்துறையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.

மேலும், பாதுகாப்பு காரணங்களுக்காக முதலமைச்சர் பயணிக்கும் வழித்தடம் மற்றும் புதுக்கோட்டை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள மொத்தம் 13 மதுக்கடைகளை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் இன்று ஒரு நாள் ட்ரோன்கள் பயன்படுத்தவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

இதற்கிடையே, முதலமைச்சர் பயணிக்க உள்ள சாலைகளில் சீரமைப்புப் பணிகள், தூய்மைப் பணிகள் உள்ளிட்ட முன்னேற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

முதலமைச்சரின் பயணத் திட்டம் என்ன?

அரசு விழா பிற்பகல் 1.15 மணியளவில் நிறைவடைந்ததும், அங்கிருந்து புறப்படும் முதலமைச்சர் புதுக்கோட்டை அரசு விருந்தினர் மாளிகைக்குச் செல்கிறார். அங்கு ஓய்வு மற்றும் மதிய உணவை முடித்துக் கொண்டு பிற்பகல் 2.45 மணிக்கு புதுக்கோட்டையில் இருந்து திருச்சிக்குப் புறப்படுகிறார். பின்னர் திருச்சி விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் மீண்டும் சென்னை திரும்புகிறார்.

ரூ.100 கோடிக்கும் அதிகமான நலத்திட்ட உதவிகள், புதிய பேருந்து நிலையத் திறப்பு, விளையாட்டு அரங்கம் திறப்பு எனப் பல்வேறு நிகழ்வுகளுடன் முதலமைச்சர் விஜய்யின் புதுக்கோட்டை பயணம் இன்று நடைபெற உள்ளதால், மாவட்டம் முழுவதும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


Spread the love

Leave a Reply

Your email address will not be published.

× Free India Logo
Welcome! Free India
FREE INDIA · Reader account

Login is optional. You can close this window and keep reading.