மின் வெட்டுக்கு முற்றுப்புள்ளி…. எண்ட்ரி கொடுக்கும் ராதாகிருஷ்ணன்..!

Home TamilNadu மின் வெட்டுக்கு முற்றுப்புள்ளி…. எண்ட்ரி கொடுக்கும் ராதாகிருஷ்ணன்..!
மின் வெட்டுக்கு முற்றுப்புள்ளி…. எண்ட்ரி கொடுக்கும் ராதாகிருஷ்ணன்..!
Spread the love

மாநிலத்தில் மின்சாரத் துறையை ஒழுங்குபடுத்தும் முக்கிய அமைப்பாக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் செயல்பட்டு வருகிறது. கடந்த 1999-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த ஆணையம், மின்சாரக் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்களில் முடிவெடுக்கும் அதிகாரத்தை கொண்டுள்ளது.

மின் உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து மின்சாரம் வாங்குவது, மின்சாரத்தை கொண்டு செல்வதற்கான கட்டணங்களை ஒழுங்குபடுத்துவது என பல்வேறு பணிகளையும் ஆணையம் மேற்கொள்கிறது. இதுதவிர, மின்சாரத் துறையில் அமல்படுத்த வேண்டிய விதிமுறைகளை உருவாக்குவதுடன், அது தொடர்பான சட்டப்பூர்வ விவகாரங்களையும் விசாரிக்கிறது.

சமீப காலமாக ஆணையத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட காலியிடங்களால், அதன் முழுமையான செயல்பாடுகளில் சுணக்கம் ஏற்பட்டிருந்தது. சட்ட உறுப்பினராக இருந்த மோகன் கடந்த மார்ச் 9-ம் தேதி ஓய்வு பெற்றார். அதன்பின்னர் உறுப்பினர் வெங்கடேசனின் பதவிக்காலமும் ஜூன் 1-ம் தேதியுடன் முடிவுக்கு வந்தது. இந்த சூழலில் ஆணையத்தின் ஒரே அதிகாரியாக செயல்பட்டு வந்த மணிவண்ணன், ஜூன் 19-ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை அரசு ஜூன் 24-ம் தேதி ஏற்றுக்கொண்டது. இதனால் ஆணையத்தின் முக்கியப் பொறுப்புகள் அனைத்தும் காலியாகும் நிலை ஏற்பட்டது.

காலியாக இருந்த பதவிகளுக்கு புதிய நபர்களை நியமிக்கும் நடவடிக்கையை தமிழ்நாடு அரசு மேற்கொண்டது. இதற்காக ஓய்வுபெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி டீக்காராமன் தலைமையில் மூன்று பேர் கொண்ட தேர்வுக் குழு அமைக்கப்பட்டது.

இந்தக் குழு செப்டம்பர் 15-ம் தேதி ஆலோசனை நடத்தி, ஒவ்வொரு பதவிக்கும் தகுதியான தலா இரண்டு நபர்களின் பெயர்களை அரசின் பரிசீலனைக்கு அனுப்பியது. இதையடுத்து ஆணையத்தின் புதிய தலைமை மற்றும் உறுப்பினர்களுக்கான நியமனங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியில் கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் பயிற்சித் துறை தலைவராக இருக்கும் ஜெ. ராதாகிருஷ்ணன், தற்போது மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்கிறார்.

அவருடன் முன்னாள் மின் பகிர்மானக் கழக இயக்குநர் ஏ.ஆர். மாஸ்கர்னஸ் ஆணைய உறுப்பினராகவும், ஏ. முத்துசாரதா சட்ட உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் நீண்ட நாட்களாக நிரப்பப்படாமல் இருந்த முக்கியப் பதவிகள் மீண்டும் நிரப்பப்பட்டுள்ளன.

மின்வாரியத்தின் தலைவராக ஏற்கனவே பணியாற்றிய அனுபவம் ராதாகிருஷ்ணனுக்கு உள்ளது. நிர்வாக ரீதியாக மின்சாரத் துறையுடன் அவருக்கு இருக்கும் முன் அனுபவமும் இந்தப் புதிய பொறுப்பில் கவனம் பெற்றுள்ளது.

தற்போது அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியின் தலைமை இயக்குநராக செயல்பட்டு வரும் ராதாகிருஷ்ணன், இந்த மாத இறுதியில் ஓய்வு பெற இருந்தார். ஆனால், தற்போது அவருக்கு மேலும் ஐந்து ஆண்டுகளுக்கான புதிய பொறுப்பு கிடைத்துள்ளது.

மின்சாரக் கட்டண நிர்ணயம், மின் கொள்முதல் மற்றும் மின் பரிமாற்றம் தொடர்பான கட்டண ஒழுங்குமுறை உள்ளிட்ட முக்கிய முடிவுகள் இனி ஆணையத்தின் முன் வர உள்ளன. இந்த முக்கியத்துவம் வாய்ந்த அமைப்பின் தலைவராக ராதாகிருஷ்ணன் பொறுப்பேற்றிருப்பது மின்துறை வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.

இதனைத் தொடர்ந்து, ஏற்கனவே மாநிலத்தி ஆங்காங்கே மின்வெட்டு பிரச்னைகள் ஏற்படுவது தொடர்பாக, விரைவில் சீரான முடிவெடுக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 


Spread the love

Leave a Reply

Your email address will not be published.

× Free India Logo
Welcome! Free India