
நாங்கள் ஆட்சிக்கு வந்தால், மாதந்தோறும் மின்கட்டணம் கணக்கீடு செய்யப்படும், ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதம் 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் வழங்கப்படும்’ என்றெல்லாம் வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்த முதல்வர் விஜய், 500 யூனிட்டுக்கு குறைவாக மின்சாரத்தை பயன்படுத்துவோருக்கே 200 யூனிட் இலவசம், இரண்டு மாதங்களுக்கு ஒருமுறையே கணக்கீடு என அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார். இப்போது அதையெல்லாம் தூக்கி சாப்பிடும்விதமாக, விண்ணை முட்டும்வகையில் எகிறிவரும் மின் கட்டணத்தால் ‘ஷாக்’ அடித்து கதிகலங்கி நிற்கிறார்கள் தமிழக மக்கள்!
இதுகுறித்து விவரமறிந்த அரசியல் பார்வையாளர் ஒருவரிடம் பேசினோம். “விஜய் முதல்வராக பதவியேற்றதும், 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம்’ 500 யூனிட்டுக்கு கீழ் மின்நுகர்வு செய்பவர்களுக்கு மட்டும்தான் என அதிர்ச்சி கொடுத்தார்.
இப்படியாக 200 யூனிட் இலவச மின்சாரம் அறிவிக்கப்பட்ட பிறகும், கடந்த ஜூலை மாதத்தில் வழக்கத்தைவிட பலருக்கும் 4 மடங்குக்கு மேல் மின்கட்டணம் வந்திருப்பதாக புகார்கள் எழுந்திருக்கின்றன. சோஷியல் மீடியா பிரபலங்கள் தொடங்கி கிராமப்புற சாமானியர்கள்வரை இதுகுறித்து வெளிப்படையாக கொந்தளிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.
இப்படியாக, ஒன்பதரை லட்சம் வீடுகளில் கடந்த மே மாதத்தைவிட ஜூலையில் அதிக மின்கட்டணம் வந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு ஸ்டாலின், எடப்பாடி, சீமான், தினகரன், அன்புமணி உள்ளிட்டோர் கடும் கண்டனங்களை தெரிவிக்க, இது அரசுக்கு நெருக்கடியாக மாறியிருக்கிறது. இதையடுத்து, அதிக மின்கட்டணம் வந்திருந்த சுமார் 3.70 லட்சம் மின் இணைப்புகளை ஆய்வு செய்ய உத்தரவிட்டது மின் வாரியம்.
இதற்கிடையேதான் ஆகஸ்ட் இறுதி, செப்டம்பர் தொடக்கத்திற்கான மின்கட்டண விவரம் பெற்ற பொதுமக்கள் வழக்கத்திற்கு மாறாக அதிக மின்கட்டணம் வந்திருப்பதைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ளனர். உதாரணத்திற்கு, வழக்கமாக 12,000 ரூபாய் மின் கட்டணம் வரும் திருவல்லிக்கேணியில் சலூன்கடை வைத்துள்ள ஆறுமுகத்திற்கு இம்முறை.
இரட்டிப்பாக ரூ.24,000 வந்திருக்கிறது. இதுகுறித்து ராயப்பேட்டை மின்துறை அலுவலகத்தில் அவர் விசாரித்தபோது,’பில் ரூ.13000தான். மீதி பவர் ஃபேக்டர் பெனால்டி ‘KWH ரீடிங், KVH ரீடிங் என்றெல்லாம் டெக்னிக்கல் விஷயங்களை சொல்லி அவரை குழப்பியிருக்கிறார்கள். இப்படியாக பலருக்கும், இரு மாதங்களுக்கு முன்பு கட்டிய தொகையைவிட, தற்போது இரண்டு மற்றும் மூன்று மடங்கு அதிகமாக மின்கட்டணம் வந்திருக்கிறது.
இதுகுறித்து, எழுத்தாளர் சரவணன் சந்திரன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், ‘அரசாங்கத்திற்கு கைச்செலவுக்கு காசு வேண்டுமென்றால், நேரடியாகவே கேட்டுப் பெறலாம். இப்படி தட்டிப் பறிக்க தேவையில்லை’ என தன் கோபத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். இப்பிரச்னை எழுந்த தொடக்கத்தில், ‘த.வெ.சு. அரசு சத்தமே இல்லாமல் ஒவ்வொரு யூனிட் மின்சாரத்துக்குமான விலையையும் (டேரிஃப்) கூட்டிவிட்டது.
உதாரணமாக தி.மு.க ஆட்சியில் 101-400 யூனிட் வரையிலான மின்பயன்பாட்டுக்கு ரூ.2.35/யூனிட் என்றிருந்த கட்டணத்தை, ரூ.4.70 என்று இந்த அரசு உயர்த்திவிட்டது. அப்படி ஒவ்வொரு படிநிலைக்கும் (ஸ்லாப்) கட்டணத்தை அதிகரித்துள்ளது. ஆண்டுதோறும் தானாகவே உயரும் உதய் மின் திட்டத்திற்கும் அரசு இணங்கிவிட்டது. என்று சொல்லப்பட்டது.
அதேபோல, தற்போது இரு மாதங்களுக்கு ஒருமுறை மின் பயன்பாடு கணக்கெடுக்கப்படும் நிலையில், 200 யூனிட் இலவசத்தை பெரும்பாலோனோருக்கு சென்று சேரவிடாமல் செய்வதற்கு ஒரு குளறுபடியும் நடத்தப்பட்டிருக்கிறது. அதாவது, 60 நாட்களுக்கு ஒருமுறை மின் கணக்கீட்டை எடுக்காமல், சில வாரங்கள் தாமதமாக கணக்கீடு செய்துள்ளனர். அதன்மூலம், தனிமனிதரின் மின்சார பயன்பாட்டின் அளவு (யூனிட்) அதிகரிக்கும். அதனால் 500 யூனிட்டை தாண்டிவிடும். அப்போது 200 யூனிட் இலவசம் என்பது பொருந்தாது. ஸ்லாப் ரேட்டும் கூடிவிடும் என்பதால், அதிக கட்டணம் கட்டவேண்டி வரும்.
அனுமதிபெற்ற தவிர, மின்வாரிய அளவைவிட அதிக மின்சார பயன்பாடு இருந்தாலோ, பவர் ஃபேக்டர் அளவு சரியாக பராமரிக்கப்படாவிட்டாலோ ‘MD மற்றும் LPF உள்ளிட்ட அபராதங்களை சொல்லாமலேயே போட்டுவிடுவார்கள். மேலும், அதிகாரிகளின் விடுப்பால், முந்தைய மாதத் தொகையை அப்படியே கட்டச் சொல்லும் பி.எம்.சி. முறையும், கோடைகாலத்தில் ஏற்பட்ட ‘லோ ஓல்டேஜ்’ பிரச்னையும் அதிக மின்கட்டணம் வர முக்கியக் காரணமாக இருந்திருக்கிறது. சுருக்கமாக சொல்வதென்றால், அடித்தட்டு மக்களுக்கு சலுகை கொடுப்பதுபோல நல்ல பெயர் வாங்கிக்கொண்டு, நஷ்டத்தை ஈடுகட்ட மிடில் கிளாஸ் மக்களை பலிகடா ஆக்குகிறார்கள்” -என்றார்.
இதுகுறித்து தமிழ்நாடு மின்ஊழியர்கள் மத்திய அமைப்பின் தலைவர் எஸ்.கண்ணனிடம் பேசினோம். “மாநில அரசு, மறைமுகமாக மின்கட்டண உயர்வை (டேரிஃப்) செய்யவில்லை. அப்படி செய்திருந்தால் நாங்கள்தான் முதலில் போராடியிருப்போம்.
ஆனால், சிலருக்கு மின்கட்டணம் உயர்ந்திருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. காரணம், மின் கணக்கீடு செய்வதற்கு போதிய பணியாளர்கள் இல்லை. 6,551 – பேர் இருக்கவேண்டிய இடத்தில், 1,600 பேர்தான் இருக்கிறார்கள். அவர்களால் அனைத்து இடங்களிலும் 60 நாட்களுக்குள் ரீடிங் எடுக்க முடிவதில்லை. கூடுதல் காலம் ஆகும்போது, சிலருக்கு யூனிட் மதிப்பு உயர்ந்து, இலவச மின்சாரம் கிடைக்காமல் போய்விடுகிறது.
அதேபோல, ஆட்கள் பற்றாக்குறையால் அமர்த்தப்படும் இடைக்கால பணியாளர்கள், தங்களின் தனிப்பட்ட லாப நோக்கத்திற்காக – குறைவான மின் நுகர்வு என தோராயமாக – கம்ப்யூட்டரில் பதிவேற்றிவிடுவார்கள். அல்லது நேரிலேயே செல்லாமல் தோராய ரீடிங் போட்டு கணக்கு காட்டிவிடுவார்கள். பிறகு, சரியாக கணக்கெடுப்பு செய்யும்போது அதிக கட்டணம் வந்துவிடும். அப்படியும் சிலருக்கு கட்டண உயர்வு நடந்திருக்கலாம். இதற்கெல்லாம் தீர்வு, பணியிடங்களை நிரப்புவது மட்டும்தான்’ என்றார். இதுகுறித்து மின்துறை அமைச்சர் நிர்மல்குமாரிடம் விளக்கம் பெற முயன்றோம். = அவர் நம் அழைப்பை ஏற்கவில்லை.
கரன்ட் ஷாக் அடிக்கலாம். பில்லுமா?



Leave a Reply