கோபித்துக் கொண்ட சிவிஎஸ்… சமாதானப்படுத்திய சபாநாயகர்..!

Home TamilNadu கோபித்துக் கொண்ட சிவிஎஸ்… சமாதானப்படுத்திய சபாநாயகர்..!
கோபித்துக் கொண்ட சிவிஎஸ்… சமாதானப்படுத்திய சபாநாயகர்..!
Spread the love

சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக கொண்டு வர வலியுறுத்தி தமிழ்நாடு சட்டசபையில் இன்று(செப்.,03) தனித்தீர்மானம் கொண்டு வரப்பட்டது. முதலமைச்சர் விஜய் முன்மொழிந்த இந்தத் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

தீர்மானம் தொடர்பான விவாதத்தில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது கருத்துகளைத் தெரிவித்தனர். திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ரகுபதி பேசினார்.

இதையடுத்து அதிமுக சார்பில் தளவாய் சுந்தரம் பேசுவதற்கு சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் அழைப்பு விடுத்தார். அப்போது, தனக்கு முதலில் பேச வாய்ப்பு வழங்க வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சரும் மயிலம் தொகுதி எம்.எல்.ஏவுமான சிவி சண்முகம் வலியுறுத்தினார்.

தொடர்ந்து, தனக்கு பேச அனுமதி அளிக்க வேண்டும் என அவர் ஆவேசமாகக் கூறியதுடன், அவையில் இருந்து வெளியேறுவது போல் சென்றார். இதனால் சட்டசபையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

உடனடியாக தலையிட்ட சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், சிவி சண்முகத்திடம் அடுத்ததாக அவருக்கு பேச வாய்ப்பு வழங்கப்படும் என தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, அருகில் இருந்த எம்.எல்.ஏ. கே.பி. அன்பழகனும் சி.வி.சண்முகத்தை சமாதானப்படுத்தி மீண்டும் இருக்கையில் அமர வைத்தார்.

அதன்பிறகு தளவாய் சுந்தரம் தனது உரையை முடித்ததும், சிவி சண்முகத்திற்கு பேசுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டது.

சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு அதிமுகவில் நிலவி வரும் உள்கட்சி கருத்து வேறுபாடுகள் அவ்வப்போது வெளிப்பட்டு வருகின்றன. குறிப்பாக எடப்பாடி பழனிசாமி மற்றும் எஸ்பி வேலுமணி – சிவி சண்முகம் தரப்புக்கு இடையே ஏற்பட்டுள்ள மோதல் அரசியல் வட்டாரத்தில் தொடர்ந்து பேசுபொருளாக இருந்து வருகிறது.

முன்னதாக விஜய் அரசுக்கு எதிரான நம்பிக்கை வாக்கெடுப்பின்போது சிவி சண்முகம் உள்ளிட்ட 25 அதிமுக எம்.எல்.ஏக்கள் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதையடுத்து அவர்களுக்கு எதிராக கட்சி ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 6 எம்.எல்.ஏக்கள் பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்த நிலையில், மற்றவர்கள் மன்னிப்பு கடிதம் அளித்ததைத் தொடர்ந்து அவர்களுக்கு எதிரான தகுதி நீக்க நடவடிக்கை கைவிடப்பட்டது.

இந்நிலையில், அதிமுகவில் உட்கட்சி பிரச்சினைகள் தொடர்ந்து நீடித்து வரும் சூழலில், சட்டசபையிலேயே சிவி சண்முகம் பேச வாய்ப்பு கேட்டு அதிருப்தி தெரிவித்த சம்பவம் கவனம் பெற்றுள்ளது.


Spread the love

Leave a Reply

Your email address will not be published.

× Free India Logo
Welcome! Free India