திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை வட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களின் பெயர், முகவரி உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்களைச் சேகரிக்குமாறு வட்டாட்சியர் பிறப்பித்த உத்தரவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, அந்த சுற்றறிக்கை உடனடியாகத் திரும்பப் பெறப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
சர்ச்சையைக் கிளப்பிய சுற்றறிக்கை
குஜிலியம்பாறை வட்டாட்சியர் அய்யாசாமி வெளியிட்டதாக நேற்று (ஆகஸ்ட் 18) தேதியிட்ட சுற்றறிக்கை ஒன்று வெளியானது. அதில், தங்கள் வட்டத்திற்கு உட்பட்ட அனைத்து வருவாய் கிராமங்களிலும் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களின் விவரங்களை வருவாய் ஆய்வாளர்கள் சேகரித்து நேரடியாகச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், இதற்கு கிராம உதவியாளர்கள் ஒத்துழைக்கத் தவறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
திண்டுக்கல் எம்பி கேள்வி
அரசியல் கட்சியினரின் தனிப்பட்ட விவரங்களைச் சேகரிக்க அரசு அதிகாரி உத்தரவிட்டதற்குப் பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இது குறித்துக் கேள்வி எழுப்பிய திண்டுக்கல் மக்களவை உறுப்பினர் சச்சிதானந்தம், கைரேகைச் சட்டம் அமலில் இருந்த காலத்தில் கூட இது போன்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டதில்லை என்று சுட்டிக்காட்டினார். மேலும், ஒரு தேசிய அரசியல் கட்சியின் விவரங்களைச் சேகரிக்க வட்டாட்சியருக்கு யார் அதிகாரம் கொடுத்தது என்றும், இது குறித்து மாவட்ட நிர்வாகம் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
பின்னணி என்ன?
குஜிலியம்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில் வாரத்தில் குறிப்பிட்ட 4 நாள்களில் மட்டும் மதியம் 12 மணி முதல் 1 மணி வரை மனுக்கள் பெறப்படும் என அறிவிப்பு ஒட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், மனு அளிக்க வரும் பொதுமக்கள் செல்போன் கொண்டு வரக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
இதனிடையே, தலித் மக்களின் வீட்டுமனை பட்டா தொடர்பான ஆக்கிரமிப்பு முயற்சியை தடுக்கக் கோரி மனு அளிக்கச் சென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளிடம் வட்டாட்சியர் ஒருமையில் பேசியதாகவும், அரசியல் கட்சியினருக்கு தனது அலுவலகத்தில் அனுமதி இல்லை என தெரிவித்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து வட்டாட்சியர் தரப்பில் விளக்கம் வெளியாகவில்லை. இதனால் அவருக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம் நடத்தத் திட்டமிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இந்தத் தகவலையடுத்தே வட்டாட்சியர் தன்னிச்சையாக இத்தகைய உத்தரவைப் பிறப்பித்ததாகத் தெரிகிறது.
இந்த விவகாரம் மாநில அளவில் விவாதப் பொருளானதைத் தொடர்ந்து விளக்கமளித்த திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி, குஜிலியம்பாறை வட்டாட்சியர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்ட அந்தச் சுற்றறிக்கை உடனடியாகத் திரும்பப் பெறப்படுவதாக அறிவித்துள்ளார்.
இதன்விளைவாக, வட்டாட்சியர் அய்யாசாமியை திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து பணியிட மாற்றம்செய்துள்ளது.




Leave a Reply