Gen Z இளைஞர்கள் தவறாக வழிநடத்தப்படுகிறார்களா? – ஆளுநர் சொன்னது என்ன?

Home TamilNadu Gen Z இளைஞர்கள் தவறாக வழிநடத்தப்படுகிறார்களா? – ஆளுநர் சொன்னது என்ன?
Gen Z இளைஞர்கள் தவறாக வழிநடத்தப்படுகிறார்களா? – ஆளுநர் சொன்னது என்ன?
Spread the love

திருநெல்வேலி மாவட்டம் அபிஷேகப்பட்டியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான ஆர்.வி. அர்லேக்கர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் பேசுகையில், பட்டம் மற்றும் முதுகலைப் பட்டம் பெற வந்த அனைத்து மாணவர்களையும் அரங்கிற்குள் அமர வைக்க முடியாததற்கு முதலில் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக தெரிவித்தார். சில மாணவர்கள் அரங்கிற்கு வெளியே இருந்ததாகத் தனக்கு தெரிவிக்கப்பட்டதாகவும், அனைவருக்கும் போதுமான வசதிகளை ஏற்படுத்த வேண்டியது பல்கலைக்கழக வேந்தராகிய தனது பொறுப்பு என்றும் கூறினார். அடுத்த பட்டமளிப்பு விழாவை இன்னும் பெரிய அரங்கில் நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று துணைவேந்தரிடம் கேட்டுக் கொண்டார்.

மாணவர்கள்தான் நாட்டின் எதிர்காலம் மட்டுமல்ல, நிகழ்காலமும் கூட என்றும், இன்றைய இளம் தலைமுறையைப் பற்றி பல்வேறு தவறான கருத்துகள் கூறப்படுகின்றன என்றும் குறிப்பிட்டார். ஆனால், சமீபத்தில் டெல்லி ஜந்தர் மந்தரில் நடந்த நிகழ்வுகளைப் பார்த்தபோது, அங்கிருந்த இளைஞர்களையும், இங்கு பட்டம் பெறும் மாணவர்களையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, தமிழக மாணவர்களின் பொறுமை, ஒழுக்கம் மற்றும் முதிர்ச்சியை தான் பெருமையுடன் காண்கிறேன் என்றார்.

பட்டத்தை வேந்தரிடம் இருந்து நேரடியாகப் பெற வேண்டும் என்று மாணவர்கள் எதிர்பார்ப்பது அவர்களின் உரிமை என்றும், அதற்காக அவர்கள் கடுமையாக உழைத்து, தேர்ச்சி பெற்றிருப்பதாகவும் தெரிவித்தார். மாணவர்களின் உழைப்பை ஒருபோதும் புறக்கணிக்க மாட்டேன் என்றும், சுமார் 800 முதல் 900 மாணவர்கள் நேரடியாக பட்டம் பெறுவதில் மகிழ்ச்சி அடைவதாகவும் கூறினார்.

இன்றைய இளம் தலைமுறையினர் பெற்றோர், ஆசிரியர்கள், சமூகம் மற்றும் நாட்டைப் பற்றி என்ன சிந்திக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வது மிகவும் முக்கியம் என்றும், மாணவர்களுடன் நேரடியாக சந்தித்து பேசுவதில் தனக்கு பெருமை இருப்பதாகவும் ஆளுநர் தெரிவித்தார். பல மாணவர்கள் தன்னை “வணக்கம்” என்று வரவேற்று, தனது கைகளால் பட்டம் பெறுவதில் பெருமை கொள்வதாக கூறியது மகிழ்ச்சியளித்ததாகவும், மாணவர்களின் தேவைகளை அறிந்து, அவர்களுடன் நெருக்கமாக உரையாடுவதே தனது நோக்கம் என்றும் குறிப்பிட்டார்.

2047-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவது பிரதமரின் கனவு மட்டுமல்ல; நாட்டு மக்களின் கனவாகவும் மாற வேண்டும் என்றும், அந்த இலக்கை அடைய இன்றே செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

எந்த ஒரு பணிக்கும் அரசுத் திட்டங்களுக்காக மட்டுமே காத்திருக்காமல், “நான் என்ன செய்யப் போகிறேன்?” என்ற கேள்வியை ஒவ்வொருவரும் தங்களுக்குள் எழுப்பிக் கொள்ள வேண்டும் என்றும், மாணவர்களிடம் தகவல்கள் மட்டுமல்ல, அறிவும் திறமையும் இருப்பதால் அதை சமூக நலனுக்காக பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

மேலும், மீண்டும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கு வந்து, மாணவர்களுடன் ஒரு நாள் முழுவதும் கலந்துரையாட விருப்பம் இருப்பதாகவும், மேடையில் இருந்து பேசுவதை விட மாணவர்களுடன் நேரடியாக உரையாடுவதில்தான் தனக்கு திருப்தி கிடைக்கும் என்றும் தெரிவித்தார்.

இறுதியாக, “உங்களுக்கும் பசி இருக்கும்; எனக்கும் பசிக்கிறது. இருந்தாலும், நீங்கள்தான் இந்த நாட்டின் எதிர்காலம். தமிழ்நாட்டு மாணவர்களும், இந்திய இளைஞர்களும் நாட்டை முன்னேற்றும் ஆற்றல் கொண்டவர்கள்” என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.

இதனைத் தொடர்ந்து வந்தே மாதரம் இசைக்கப்பட்டதுடன் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா நிறைவடைந்தது.


Spread the love

Leave a Reply

Your email address will not be published.

× Free India Logo
Welcome! Free India