
மதுரையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், வைகை ஆற்றைக் கடந்து சென்றபோது அதில் தண்ணீர் இல்லாத நிலையை கண்டு வேதனை அடைந்ததாக தெரிவித்தார். மேலும், வைகை ஆற்றை சீரமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், ஆளுநர் மாளிகையே நேரடியாக களமிறங்கும் என்றும் கூறினார். ஆளுநரின் இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பினரிடமிருந்து கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன.
இந்நிலையில், ஆளுநரின் கருத்துக்கு பதிலடி தந்துள்ளார் அமைச்சர் நிர்மல் குமார். மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கண்காணிப்பு குழு கூட்டத்தில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் நிர்மல் குமார், “கவர்னருக்கு தேவையில்லாத விசயம். கவர்னர் ஒரு அரசு நிர்வாகத்தில் ஒரு மாநில அரசின் நிர்வாகத்தில் துறைகளையும் ஆய்வு செய்ய அனுமதி கிடையாது. அதிகாரிகளும் கண்டிப்பாக வரும் காலங்களில் துறை அமைச்சர்கள் அனுமதி இல்லாமல் கவர்னருடன் ஆய்வுகள் நடத்தக்கூடாது.
ஆய்வு செய்வதற்கான அதிகாரம் ஆளுநருக்கு இல்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிலும், அரசு இயந்திரங்களின் செயல்பாடுகளிலும் கவர்னர் தலையிடுவதற்கு அதிகாரம் கிடையாது. ஒன்றிய அரசால் நியமிக்கப்பட்ட ஒரு நபர் அவரது அதிகாரம் ராஜ்பவனில் மட்டும்தான் மற்றபடி எங்கும் தலையிடுவதற்கான அதிகாரம் இல்லை. ஆளுநர் ஒன்றிய அரசால் நியமிக்கப்பட்ட நபர் அவர் அதிகாரத்துக்கு உட்பட்டு ராஜ் பவனில் மட்டும் இருந்தால் நல்லது
நமது ஆட்சி தொடங்கியவுடன் வைகையை தூர் வருவதற்கான பணிகள் உடனடியாக துவக்கப்பட்டது. ஒன்றிய அரசிடம் சுற்றுச்சூழல் அனுமதி கேட்டு இரண்டு வாரங்கள் ஆகியும் இதுவரைக்கும் அனுமதி வரவில்லை. வைகை அணையை தூர்வார தவெக அரசு தேவையான விஷயத்தை விரைவாக செய்கிறது.; ஒன்றிய அரசு அனுமதி வந்தவுடன் தொடங்குவோம்” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் நிர்மல்குமார், “ஆளுநர் சுற்றுச்சூழல் அனுமதி வாங்குவாரா? மண்வெட்டி கையில் எடுத்து தூர்வாருவாரா? நீர்வளத் துறை அதிகாரியிடம் அனுமதி பெற்று உத்தரவு வாங்குவாரா? ஆளுநர் எங்கே களம் இறங்க முடியும்? எங்கேயும் களம் இறங்க முடியாது.
வைகையில் தூர் வருவதற்கு எப்படி போவார் அவர்? ஒப்பந்ததாரரை கூப்பிடுவாரா? லாரிகளை எடுத்து போய் தூர்வருவாரா? ஆளுநர் மாளிகை எதை செய்யுமோ அதை மட்டும் செய்தால் போதும். தேவையில்லாமல் குழப்பம் விளைவிக்கும் எந்த வேலையும் ஆளுநர் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அரசு தேவையான நடவடிக்கைகளை எல்லா விதத்திலும் எடுத்துக்கொண்டிருக்கிறது” என்று காட்டமாக விமர்சித்தார்.



Leave a Reply