விஜய் Vs உதய்.. காரசாரமாக நடந்த விவாதம்.. !

Home TamilNadu விஜய் Vs உதய்.. காரசாரமாக நடந்த விவாதம்.. !
விஜய் Vs உதய்.. காரசாரமாக நடந்த விவாதம்.. !
Spread the love

முதலமைச்சர் முன்வைத்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து அவையில் பரபரப்பான சூழல் நிலவிய நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையிலான திமுக எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர்.

ஆளுநர் உரை மீதான விவாதத்துக்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் விஜய், தமிழகத்தில் நிலவும் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, மின்வெட்டு பிரச்சினைகள், போதைப்பொருள் புழக்கம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை சுட்டிக்காட்டினார். இந்தப் பிரச்சினைகளுக்கு முந்தைய திமுக அரசின் நிர்வாகத் தவறுகளே காரணம் என அவர் குற்றம்சாட்டினார்.

மேலும், கடந்த திமுக ஆட்சியில் சுமார் 10 மாதங்களாக சட்டம்-ஒழுங்கு டிஜிபி பதவி நிரப்பப்படாமல் இருந்ததாகவும், த.வெ.க. அரசு பொறுப்பேற்ற பின்னரே புதிய டிஜிபி நியமிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். இதனுடன், டாஸ்மாக் நிறுவனத்தில் “கட்சி நிதி” என்ற பெயரில் முறைகேடாக பணம் வசூலிக்கப்பட்டதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

முதலமைச்சரின் இந்த கருத்துகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த திமுக உறுப்பினர்கள், தங்களது இருக்கைகளில் இருந்து எழுந்து நின்று முழக்கங்களை எழுப்பினர். அவையில் சலசலப்பு ஏற்பட்ட நிலையில், பேரவைத் தலைவர் தலையிட்டு, முதலமைச்சர் தனது உரையை நிறைவு செய்த பிறகு எதிர்க்கட்சித் தலைவருக்கு பதிலளிக்க வாய்ப்பு வழங்கப்படும் என்று அறிவித்தார். இருப்பினும், திமுக உறுப்பினர்கள் தொடர்ந்து எதிர்ப்பை வெளிப்படுத்தியதால் அவையில் பதற்றமான சூழல் நீடித்தது.

இந்த நிலையில் குறுக்கிட்ட அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “முதலமைச்சர் சட்டப்பேரவையில் பேசவில்லை என்று கடந்த சில நாட்களாக எதிர்க்கட்சியினர் விமர்சித்து வந்தனர். ஆனால் தற்போது அவர் பேசத் தொடங்கியதும், அவையை நடத்தவிடாமல் அமளியில் ஈடுபடுகின்றனர்” என்று திமுகவை விமர்சித்தார்.

இதற்கிடையில், அவையில் நிலவிய பரபரப்பான சூழலுக்கு மத்தியிலும் முதலமைச்சர் விஜய் தனது உரையை தொடர்ந்து, முந்தைய திமுக ஆட்சியின் செயல்பாடுகள் குறித்து விமர்சனங்களை முன்வைத்தார். இதனால் ஆவேசமடைந்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையிலான திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், முதலமைச்சரின் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒருமித்தமாக அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

இதனைத் தொடர்ந்து உரையாற்றிய முதலமைச்சர் விஜய், திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளை கடுமையாக விமர்சித்தார். “திமுகவின் ஆதரவால்தான் தற்போதைய ஆட்சி நடைபெறுகிறது என்று தொடர்ந்து கூறி வருகின்றனர். ஆனால் இடதுசாரி கட்சிகள் தங்கள் சொந்த அரசியல் முடிவின் அடிப்படையில்தான் த.வெ.க. அரசுக்கு ஆதரவு அளித்துள்ளன. நாங்கள் அனுப்பிவைத்தவர்களுக்கு அமைச்சர் பதவி கொடுத்தால் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கிறீர்கள்?” என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், “கட்சி நிதி என்ற பெயரில் நடைபெற்றதாக கூறப்படும் முறைகேடுகளை தற்போது அரசின் கஜானாவுக்கு திருப்பி கொண்டு வருகிறோம். மக்களின் பணத்தை நாங்கள் தொடமாட்டோம்; மக்களின் பணத்தை தவறாக பயன்படுத்தியவர்களையும் சட்டத்தின் முன் இருந்து தப்பவிடமாட்டோம்” என்று தெரிவித்தார்.

பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவம் குறித்தும் பேசிய முதலமைச்சர், “கடந்த ஆட்சியில் எத்தனை பெண்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது? தற்போதைய த.வெ.க. ஆட்சியில் நான்கு பெண்கள் அமைச்சர்களாக உள்ளனர்” என்று கூறினார்.

திமுக வெளிநடப்பு செய்ததை குறிப்பிட்டு பேசிய அவர், “வெளியே சென்றவர்களுக்கும் கேட்க வேண்டும் என்பதற்காகத்தான் சத்தமாக பேசினேன்” என்று நகைச்சுவையாக குறிப்பிட்டார். மேலும், “நம் மீதும், நமக்கு வாக்களித்த மக்கள்மீதும் அவதூறு பரப்புகிறார்கள். மக்கள் எங்களுக்கு வாக்களித்தது தவறு என்று கூறுகின்றனர். ஐம்பது ஆண்டுகளாக பயன்படுத்திய அரசியல் உத்திகளை மாற்றிப் பார்க்க வேண்டும். ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள் மற்றும் ஆலோசனைகள் வந்தால் அவற்றை நிச்சயம் ஏற்றுக்கொள்வோம்” என்றும் தெரிவித்தார்.

முதலமைச்சர் விஜயின் இந்த உரையும், அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட திமுகவினரின் வெளிநடப்பும் தமிழக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், சட்டப்பேரவையின் முக்கிய நிகழ்வாகவும் மாறியுள்ளது.

 

 


Spread the love

Leave a Reply

Your email address will not be published.

× Free India Logo
Welcome! Free India