சுனாமியாக மாறும் பினாமிகள்.. வில்லங்கத்தில் விஜயபாஸ்கர்..?

Home TamilNadu சுனாமியாக மாறும் பினாமிகள்.. வில்லங்கத்தில் விஜயபாஸ்கர்..?
சுனாமியாக மாறும் பினாமிகள்.. வில்லங்கத்தில் விஜயபாஸ்கர்..?
Spread the love

கரூரைப் பொறுத்தவரை ஒரு அரசு திட்டம் வடிவமைக்க தொடங்கும்போதே, அதுகுறித்த முழு விவரங்கள் அரசியல்வாதிகள் மூலம் தொழிலதிபர்களுக்கு சென்றுவிடும். அரசியல்வாதிகளின் துணையோடு தொழிலதிபர்கள் பல நூறு ஏக்கர் நிலங்களை வாங்குவார்கள். வடிவமைக்கப்பட்ட திட்டம் நிதி ஒதுக்கீடு செய்து முழுமையாகும்போது, அந்தத் திட்டத்திற்காக இடம் தேர்வு செய்யப்போகிறோம் என மாவட்ட நிர்வாகம் சார்பாக அறிவிப்பு வெளியாகும். அதற்காகவே காத்திருந்ததைப்போல ஏற்கெனவே குறைந்த விலையில் வாங்கிப் போட்டு நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களுக்கு நடுவே உள்ள இரண்டு ஏக்கர், 5 ஏக்கர் அளவுக்கு தானமாக அரசுக்குப் பிரித்துக் கொடுப்பார்கள். அங்குதான் புதிய திட்டத்திற்கான கட்டுமானப் பணி தொடங்கும். அதற்கடுத்த நொடியே அதைச் சுற்றி இருக்கும் நிலங்களின் மதிப்பு சுமார் இருநூறு மடங்கு அதிகரிக்கும்.

அப்படி வந்த திட்டங்கள்தான் கரூர் புதிய பேருந்து நிலையம். இப்போது கட்டிக்கொண்டிருக்கும் அரவக்குறிச்சி அரசு கலைக்கல்லூரி, புதிய பத்திரப்பதிவு அலுவலகம். ஆர்டிஓ அலுவலகம். ஒரு ஏக்கர் பத்து லட்ச ரூபாய் என 50 ஏக்கர் நிலத்தை மொத்தமாக 5 கோடிக்கு வாங்கி, அதிலிருந்து 3 ஏக்கர் நிலத்தை அரசுக்கு தானமாக கொடுத்து, பக்கத்தில் உள்ள தங்களது 47 ஏக்கர் நிலத்தை 200 கோடி ரூபாய் என கொள்ளை விலையில் விற்ற சம்பவம் எல்லாம் கரூரில் நடந்திருக்கிறது. சரி. இதற்கும் விஜயபாஸ்கர் மீதான புகாருக்கும் என்ன சம்பந்தம்?

விஜயபாஸ்கர் மீது புகார் கொடுத்துள்ள அரவக்குறிச்சி ஒன்றியச் செயலாளர் கலையரசனிடம் பேசினோம். ”கடந்த 2020ம் ஆண்டு தடா கோயில் பகுதியில் செல்லாண்டிபாளையத்தைச் சேர்ந்த சுப்பிரமணியம் என்பவருக்குச் சொந்தமான 6.39 ஏக்கர் நிலம் வாங்கினேன். அப்போதைய போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கேட்டுக்கொண்டதால், அந்த நிலத்திலிருந்து 180 ஏக்கர் நிலத்தை அரவக்குறிச்சி புதிய பேருந்து நிலையம் அமைக்க தானமாக கொடுத்தேன். பிறகு ஆட்சி மாற்றத்தால் திட்டம் கிடப்பில் போடப்பட்டது.

இந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் இரண்டாம் தேதி என்னை வரச் சொன்ன விஜயபாஸ்கர், உங்கள் நிலத்திற்கு பக்கத்தில் உள்ள சுப்பிரமணிக்கு சொந்தமான 50 ஏக்கர் நிலத்தில் பாகப்பிரிவினை செய்வதால், நீங்கள் அரசுக்கு தானமாக கொடுத்த ஆவணம் மற்றும் ஒரிஜினல் பத்திரம் தேவைப்படுகிறது என்றார்.

நானும் கொடுத்தேன். சிறிது நாட்களுக்குப் பிறகு பத்திரத்தை கேட்டபோது, தேர்தல் வேலையாக இருக்கிறேன். பிறகு தருகிறேன்’ என்றார். இந்த நிலையில், கடந்த வாரம் இந்த நிலங்களின் மதிப்பு எவ்வளவு என்று பத்திரப்பதிவு அலுவலகத்தில் விசாரித்தபோது. ‘நான் சுப்பிரமணியிடம் ஒரிஜினல் பத்திரங்களை அடமானம் வைந்து 25 லட்சம் ரூபாய் கடன் பெற்றிருப்பதாகவும், இந்த பத்திரத்தை வேறு யாருக்கும் நான் பதிவு செய்து தரக்கூடாது’ என்னும் தடை ஆணை வாங்கி இருந்தார்.

இதையடுத்து என்னிடமிருந்து பணம் பறிக்க, என்னை ஏமாற்றி பத்திரத்தை வாங்கி மோசடியில் ஈடுபட்ட மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் சுப்பிரமணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது ஒரிஜினல் பத்திரத்தை கொடுக்க வேண்டும்’ என புகார் கொடுத்திருக்கிறேன். நான் அரசுக்கு தானமாக கொடுத்ததுபோல், இப்போது அரவக்குறிச்சி கலைக்கல்லூரி மற்றும் பத்திரப்பதிவு அலுவலகம் ஆர்டிஓ அலுவலகம் கட்ட கோவையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் கரூர் – மதுரை நான்கு வழிச்சாலையில் ஐந்து ஏக்கர் நிலத்தை தானமாக கொடுத்துள்ளார். அப்பகுதியில் 70 ஏக்கருக்கு மேல் சில மாதங்களுக்கு முன்புதான் நிலம் வாங்கப்பட்டது. கல்லூரிக்கு தாளம் கொடுப்பதற்காகவே வாங்கப்பட்ட நிலத்தில் ஐந்து ஏக்கர் தானம் கொடுத்துள்ளார்கள். மீதமுள்ள 65 ஏக்கர் நிலம் இப்போது விண்ணைத் தொடும் விலையில் விற்பனையாகிக்கொண்டிருக்கிறது.

அது அரசு புறம்போக்கு நிலம் அதற்கு அரவக்குறிச்சி தாலுகா அலுவலர்கள் துணையுடன் போலி பட்டா வாங்கி அரசுக்கே தானமாக வழங்கி மோசடி செய்துள்ளனர். அதன் மீதும் நான் புகார் கொடுத்திருக்கிறேன். அடுத்த வாரம் கரூர் டி ஆர்.ஓவை விசாரணைக்கு அழைத்திருக்கிறார்கள். விரைவில் இந்தப் பிரச்னை விஸ்வரூபம் எடுக்கும்” என்றார்.
இதுகுறித்துப் பேசிய மாஜி அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், ”சுப்பிரமணி என்பவரது 6.39 ஏக்கர் நிலம் ஒன்றியச் செயலாளர் கலையரசன் பெயரில் கிரயம் செய்யப்பட்டது. அங்கு பேருந்து நிலையம். நீதிமன்றம், ஆர்.டி.ஓ அலுவலகம் கட்ட அந்த இடத்தை அரசுக்கு தானமாக வழங்க வேண்டும்’ என்றும், அப்படி வழங்கப்பட்ட திட்டங்கள் நிறைவேறவில்லை என்றால் அந்த இடங்களை கலையரசன் திருப்பித் தந்துவிட வேண்டும்’ என்றும் 2020 பிப்ரவரி மாதம் 14ம் தேதி கலையரசன் ஒப்புதல் ஆவணம் கொடுத்துள்ளார். நான் அமைச்சராக இருந்த காரணத்தால் என்னிடம் இதை தெரிவித்துவிட்டு சுப்பிரமணியனும், கலையரசனும் இதைச் செய்தார்கள் எனக்கும் இதற்கும் சம்பந்தமில்லை. இதை சட்டரீதியாக சந்திப்பேன்” என்றார்.

நெருப்பு இல்லாமல் புகையாது.

–    அரவிந்த்


Spread the love

Leave a Reply

Your email address will not be published.

× Free India Logo
Welcome! Free India