
விஜய் தான் போட்டியிட்ட பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த நிலையில், பெரம்பூர் தொகுதி எம்.எல்.ஏவாக இருந்துகொண்டு, திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்திருக்கிறார். அதனால் அங்கு விரைவில் இடைத்தேர்தல் வரப்போகிறது. இடைத்தேர்தல் என்றாலே ஆளுங்கட்சியின் அதிகாரத்திற்கும், அவர்கள் அள்ளி வீசும் பணத்திற்கும் பஞ்சம் இருக்காது.
அரசியலில் திருமங்கலம் இடைத்தேர்தல் ஃபார்முலா, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் ஃபார்முலா என இடைத்தேர்தல்களுக்கு பலவித சிறப்புகள் உண்டு. கடந்த 20 ஆண்டுகளாக இடைத்தேர்தல் என்றாலே தொகுதிவாசிகளுக்கு பணமும், பொருளும் அள்ளித் தந்த கட்சிகள், இந்த இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க வாய்ப்பிருக்காது. போட்டியிடும் கட்சிகள் தனது சொந்த செல்வாக்கை ஒரிஜினலாக தெரிந்துகொள்ள இது ஒரு வாய்ப்பு.
தொகுதியில் எந்தெந்த கட்சியில் யாருக்கு சீட் என தெரிந்துகொள்ள த.வெ.க., தி.மு.க., அதிமுக ஆகிய கட்சிகளின் முக்கிய நிர்வாகிகளிடம் பேசினோம். நம்மிடம் பேசிய தவெக. நிர்வாகி ஒருவர். தான் வெற்றிபெற்ற தொகுதியில் மீண்டும் தவெக வெற்றிபெறும் என்கிற முழு நம்பிக்கை முதல்வர் விஜய்க்கு இருக்கிறது. அதோடு இந்தத் தொகுதியில் வெற்றி வரும்போது தவெகவின் எம்.எல்.ஏ. பலத்தில் ஒரு எண்ணிக்கை கூடுகிறது என்பதால் தகுந்த வேட்பாளரை நிறுத்த முதல்வர் தயாராகி வருகிறார்.
‘தி.மு.க வேட்பாளர் இனிகோ இருதயராஜிடம் 27 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் விஜய் வெற்றிபெற்ற நிலையில் ‘அதைவிட அதிக வாக்கு வித்தியாசத்தில் என்னால் வெற்றிபெற முடியும்’ என்று சீட் வாங்கும் முயற்சியில் முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் சென்னையிலேயே முகாமிட்டிருக்கிறார். ஆனால் அவர் லால்குடி தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளர் லீமா ரோஸிடம் தோற்றுப்போனதை காரணம் காட்டி தலைமை அவருக்கு முட்டுக்கட்டை போடுகிறது.
இன்னொரு பக்கம் தவெக திருச்சி மாவட்டச் செயலாளர் கரிகாலன், இடைத்தேர்தலில் எப்படியாவது சீட் வாங்கும் முயற்சியில் அமைச்சர் புஸ்ஸி ஆனந்தையே சுற்றி சுற்றி வருகிறார். ஜெயலலிதா பாணியில் சாதாரண எளிய மனிதருக்கும் விஜய் சீட் தருவதால், யாருக்கு வேண்டுமானாலும் சீட் கிடைக்கலாமென்று அடிமட்ட தொண்டர்கள்கூ திருச்சி கிழக்கு தொகுதியை கேட்டுவருகின்றனர்” என்றார்.
திமுக தரப்பினரோ, “மீண்டும் இனிகோ இருதயராஜிற்கே சீட் வழங்க தலைமை முடிவு செய்துள்ளதாக ஒரு தகவல் இருந்தாலும், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷை இங்கு நிற்க வைத்து வெற்றிபெற வைக்கவும் ஒரு திட்டம் வைத்துள்ளனர். அதுபோக இந்த தொகுதியின் முழுப் பொறுப்பையும் பக்கத்து தொகுதி எம்.எல்.ஏ.வான முன்னாள் அமைச்சர் நேருவிடம் கொடுத்து, ‘என்ன செய்விர்களோ தெரியாது. தேர்தல் எப்போது அறிவித்தாலும் திருச்சி கிழக்கு தொகுதியில் தி.மு.க.வை வெற்றிபெற வைக்க வேண்டும். இங்கு ஜெயித்தால் மட்டுமே தோல்வியால் சோர்வடைந்துள்ள நமது தொண்டர்கள் மீண்டும் உற்சாகம் அடைவார்கள். உள்ளாட்சித் தேர்தல் முதல் நாடாளுமன்றத் தேர்தல் வரை இந்த ஒரு வெற்றி நம் கட்சிக்கு மிகப்பெரிய பலமாக இருக்கும். இந்த இடைத்தேர்தல் வெற்றிதான் நமக்கு கிடைத்திருக்கும் ஒரே துருப்புச்சீட்டு என நேருவுக்கு தி.மு.க தலைமை செக் வைத்திருக்கிறது.
அதற்கு நேருவோ, ‘என்னை எதிர்த்தும் விஜய் கட்சியில் நின்றார்கள். நான் வெற்றிபெற்றதுபோல் அன்பில் மகேஷ், கட்சிக்காரர்களை கொஞ்சம் அரவணைத்துச் சென்றிருந்தால் நவல்பட்டு விஜியை நிச்சயம் அவர் தோற்கடித்திருப்பார் என்று தன் ஆதரவாளர்களிடம் கூறியிருக்கிறார். திமுகவில் இனிகோ இருதயராஜ் முதலிடத்திலும், அன்பில் மகேஷ் இரண்டாம் இடத்திலும் சீட் பெறும் வரிசையில் இருக்கிறார்கள்” என்றனர்.
அ.தி.மு.க. தரப்பிலோ, ‘திருச்சி கிழக்கில் அதிமுக சார்பில் கல்லூரி அதிபர் ராஜசேகரன் போட்டியிட்டு விஜய் அலையில் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டார். மீண்டும் அவர் போட்டியிடத் தயாராக இல்லை” என்றனர் சுருக்கமாக.
இதுகுறித்து திருச்சி மாநகர் அதிமு.க. மாவட்டச் செயலாளர் சீனிவாசனிடம் பேசினோம். “இந்த இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடுமா அல்லது தேர்தலை புறக்கணிக்குமா என்றே தெரியவில்லை. அதற்குள் யாருக்கு சீட் என கேட்கிறீர்களே.. இடைத்தேர்தலை புறக்கணிக்காமல் தேர்தலில் போட்டி அதிமுக முடிவு செய்துவிட்டால் பொதுச்செயலாளர் அறிவிக்கும் வேட்பாளருக்கு தேர்தல் பணியாற்றுவோம். என் பெயரை அறிவித்தாலும் நான் போட்டியிட தயார்’ என்றார்.
இனிகோ இருதயராஜிடம் பேசினோம். “தலைமை மீண்டும் என்னை போட்டியிடச் சொன்னால் நிச்சயம் போட்டியிடுவேன். 27 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த நான், இடைத்தேர்தலில் அதே வாக்கு வித்தியாசத்தில் நிச்சயம் வெற்றிபெறுவேன். தொகுதி மக்களின் கல்வி வளர்ச்சிக்காக நான் பாடுபட்டதை என் தோல்விக்குப் பிறகு அவர்கள் சொல்லிச் சொல்லி வருந்துகிறார்கள். மக்கள் ஆதரவு எனக்கு இருக்கிறது. இடைத்தேர்தல் வரட்டும் பார்த்துக்கொள்ளலாம்” என்றார்.
முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணனை பலமுறை தொடர்புகொண்டும் அவர் நம் அழைப்பை ஏற்காததால், த.வெ.க. திருச்சி மாவட்டச் செயலாளர் கரிகாலனை தொடர்புகொண்டோம் “எதுவாக இருந்தாலும் தலைமையிடம் கேட்டுக்கொள்ளுங்கள்” என்றார் சிம்பிளாக.
மீண்டும் களைகட்டக் காத்திருக்கிறது திருச்சி கிழக்கு!
– அரவிந்த்



Leave a Reply