தமிழ்நாட்டில் ஏப்ரல் 23 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பாண்டியன் விரைவு ரயில், முத்துநகர் விரைவு ரயில், கன்னியாகுமரி விரைவு ரயில், பொதிகை மற்றும் நெல்லை விரைவு ரயில்களில் ரயில் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்ததுடன் காத்திருப்போர் பட்டியலிலும் முன்பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ளுர்வாசிகளை விட வெளியூர் வாசிகள் அதிக அளவில் குடியேறி உள்ளனர். உதாரணத்திற்கு தென்மாவட்டங்களில் இருந்து லட்சகணக்கானோர் இந்த 4 மாவட்டங்களில் குடியேறி உள்ளனர். இவர்கள் பல ஆண்டுகளாக இந்த மாவட்டங்களில் தங்கிவிட்டதால், பலரும் வாக்குரிமையையும் இங்கு இடமாற்றம் செய்து உள்ளனர். ஆனால் தேர்தல் நாட்களில் அரசு பொதுவிடுமுறை என்பதால் சொந்த ஊர்களுக்கு சென்றுவிடுகின்றனர்.
இதனால் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் சென்னையில் 59.06 சதவிகிதம் வாக்குகள் மட்டுமே பதிவானது. இதே போன்று 2024 நாடாளுமன்ற தேர்தலில் சென்னையில் உள்ள மூன்று நாடாளுமன்றத் தொகுதிகளில் ஒட்டுமொத்தமாக 55.94% வாக்குகள் மட்டுமே பதிவானது. இதில் சொந்த ஊர்களில் வாக்குரிமை உள்ள வாக்காளர்கள், தங்களின் பயணத்தை திட்டமிட்டு ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் உண்மையில் தேர்தல் நேரங்களில் தென்மாவட்டங்களில் சொந்த ஊர்களுக்கு சென்றுவிடுவதால் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வாக்குசதவிகிதம் குறைவதாக அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது.




Leave a Reply