“பெரும்பான்மை பலத்துடன்  ஆட்சி…”- விஜய் வெளியிட்ட பரபரப்பு தகவல்

Home TamilNadu “பெரும்பான்மை பலத்துடன்  ஆட்சி…”- விஜய் வெளியிட்ட பரபரப்பு தகவல்
“பெரும்பான்மை பலத்துடன்  ஆட்சி…”- விஜய் வெளியிட்ட பரபரப்பு தகவல்
Spread the love

2026ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைப்பதே தவெகவின் குறிக்கோள் என விஜய் அதிரடியாக தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் கடந்த பிப்ரவரியில் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். அதைத்தொடர்ந்து 2026 சட்டமன்றத் தேர்தலை இலக்காக கொண்டு கட்சி கொடி அறிமுகம், நிர்வாகிகள் தேர்வு, தவெக பிரமாண்ட மாநாடு என தவெகவின் அரசியல் நகர்வுகள் அடுத்த கட்டங்களை நோக்கி நகர்ந்து வருகிறது.கடந்த அக்.27ம் தேதி விக்கிரவாண்டி வி.சாலையில் நடந்த தவெக பிரமாண்ட மாநாட்டில் பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய், ஆளும் திமுக அரசை கடுமையாக சாடி பேசினார். இது தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மேலும் கூட்டணி ஆட்சி, கூட்டணியில் பங்கு உள்ளிட்டவை குறித்தும் விஜய் பேசினார்.

விஜய்யின் பேச்சிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் பதிலடி கொடுத்தனர். புதிதாக கட்சி தொடங்குபவர்கள் கூட திமுகவை அழிக்க நினைக்கின்றனர் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடுமையாக தாக்கி பேசினார்.மேலும் தவெக தலைவர் விஜய்யின் பேச்சை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஜெயக்குமார், கடம்பூர் ராஜு உள்ளிட்டோர் வரவேற்று கருத்து தெரிவித்தனர்.இதனால் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக உடன் தவெக கூட்டணி அமைக்கும் என தகவல்கள் வெளியானது. இந்த நிலையில், வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் தவெக கூட்டணி இல்லை என தவெக தலைமை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

இது குறித்து தவெக தலைவர் விஜய்யின் ஒப்புதலோடு அக்கட்சியின் தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில்,  “தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் கழகத்தின் கொள்கைகள், கொள்கை எதிரி, அரசியல் எதிரி, தேர்தல் நிலைப்பாடு குறித்தும் தமது உரையில் கழகத் தலைவர் விஜய் தெளிவாக, விளக்கமாக எடுத்துரைத்துள்ளார். தலைவர் விஜய்யின் வழிகாட்டுதலின்படி தமிழக வெற்றிக் கழகம், வரும் 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் வெற்றிபெற்று ஆட்சி் அமைப்பதற்கான அனைத்து வியூகங்களையும் வகுத்து, தேர்தலைச் சந்திக்கத் தயாராகி வருகிறது. 

இச்சூழலில், 2026 சட்டமன்றத் தேர்தலில் ஆடசி மாற்றத்திற்கான முதன்மைச் சக்தியாக, ஒட்டுமொத்த தமிழக மக்களின் ஏகோபித்த வரவேற்பையும் ஆதரவையும் பெற்று, மக்கள் மத்தியில் தமிழக வெற்றிக் கழகம் அடைந்து வரும் எழுச்சியை மடைமாற்றம் செய்யும் உள்நோக்கத்தோடு, அடிப்படை ஆதாரமற்ற தகவல்களைக் கொண்டு அஇஅதிமுகவுடன் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி என்று தொடர்புப்படுத்தி, பிரதான தமிழ் நாளிதழ் ஒன்று உண்மைக்கு முற்றிலும் புறம்பான தகவல்களைக் கொண்டு நேற்றுத் தலைப்புச் செய்தி் வெளியிட்டுள்ளது. இந்தச் செய்தி, முற்றிலும் தவறானது. ஆதாரமோ அடிப்படையோ அற்றது.

ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாக அரசியல் விமர்சகர்கள் என்கிற போர்வையில் உள்நோக்கத்தோடு, தான்தோன்றித்தனமாகச் சிலர் தெரிவிக்கும் பொய்யான கருத்துகளின் அடிப்படையில் தமிழக வெற்றிக் கழகத்தைத் தொடர்புப்படுத்திப் பரப்பப்படும் இது போன்ற உண்மைக்கு மாறான பொய்ச்செய்திகளைத் தமிழக மக்கள் புறக்கணித்து விடுவார்கள் என்பதை இத்தகையப் பொய்யானச் செய்திகளை உள்நோக்கத்தோடு பரப்புபவர்களுக்கு நினைவூட்டுகிறேன். 

தவெகவின் அரசியல் பாதை, முழுக்க முழுக்கத் தமிழக மக்களின் நலனுக்கானது. வெற்றிக் கொள்கைத் திருவிழாவில் கழகத் தலைவர் விஜய் ஆற்றிய உரையில் தெரிவித்த நிலைப்பாட்டின் அடிப்படையில் பெரும்பான்மை பலத்தோடு நாட்டு மக்களின் பேராதரவோடு வென்று தமிழ்நாட்டு மக்களின் நலனுக்கான நல்லரசை அமைப்பதே தவெகவின் குறிக்கோள்.எனவே, மக்களைக் குழப்பும் நோக்கில் தவெக தொடர்பாக உண்மைக்குப் புறம்பான கருத்துகளைச் செய்திகளாக வெளியிடுவதை ஊடகங்கள் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Spread the love

Leave a Reply

Your email address will not be published.

× Free India Logo
Welcome! Free India